ஆழ்கடல் மீன்பிடித்தலுக்கு விண்ணப்பித்த 67 விசைப்படகுகளில் ஆய்வு கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்


ஆழ்கடல் மீன்பிடித்தலுக்கு விண்ணப்பித்த 67 விசைப்படகுகளில் ஆய்வு கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
x
தினத்தந்தி 10 Jun 2019 10:45 PM GMT (Updated: 10 Jun 2019 9:21 PM GMT)

தூத்துக்குடியில் ஆழ்கடல் மீன்பிடித்தலுக்கு விண்ணப்பித்த 67 விசைப்படகுகளில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.

தூத்துக்குடி,

இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தூத்துக்குடியில் 67 விசைப்படகுகள் 24 மீட்டர் நீளத்துக்கு அதிகமாகவும், 240 எச்.பி.க்கு அதிக திறன் கொண்ட என்ஜின் உடையதாகவும் உள்ளது. இவர்கள் ஆழ்கடல் மீன்பிடித்தலுக்கு பதிவு செய்ய விண்ணப்பித்தனர். இதுதொடர்பாக மத்திய கடல் வாணிபத்துறை அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக ஆய்வு செய்து வருகின்றனர். வருகிற 15-ந்தேதிக்குள் ஆய்வு செய்யப்பட்டு ஏதேனும் குறைகள் இருந்தால் சரிசெய்ய அறிவுறுத்தப்படும்.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 5-ந் தேதி தேசிய சுற்றுச்சூழல் தினவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 14-ந் தேதி உலக சுற்றுச்சூழல் தினவிழா சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் தலைமையில் மருத்துவக்கல்லூரியில் கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் அனைத்து அரசு பள்ளிக்கூடங்களிலும் 12 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடக்கிறது. மாணவ-மாணவிகளுக்கு கட்டுரை, ஓவியம், பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. சைக்கிள் பேரணி, மனிதசங்கிலியும் நடக்கிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் 37 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி, யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்பட்டு உள்ளன. இதில் எல்.கே.ஜி. வகுப்பில் 385 பேரும், யு.கே.ஜி. வகுப்பில் 111 பேரும், 2 முதல் 3 வயதுக்கு உட்பட்டவர்கள் 269 பேரும் ஆக மொத்தம் 765 பேர் பதிவு செய்து உள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் அங்கீகாரம் பெறாத பள்ளிக்கூடங்கள் எதுவும் இல்லை.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து தாமிரதாது உள்ளிட்ட அனைத்து பொருட்களும் எடுக்கப்பட்டு உள்ளன. அதே நேரத்தில் ஜிப்சம் மட்டும் சுமார் 60 ஆயிரம் டன் உள்ளது. அதனை மட்டும் எடுத்து வருகின்றனர். தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற உள்ளது. இதனால் பஸ் போக்குவரத்தை மாற்றுவது தொடர்பாக ஆலோசனை நடந்து வருகிறது. பழைய பஸ் நிலையம் அருகே உள்ள மைதானத்தில் இருந்தும் பஸ் இயக்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story