முதல்-மந்திரி பட்னாவிஸ் தலைமையில் மாநில பா.ஜனதா மூத்த நிர்வாகிகள் அமித் ஷாவுடன் சந்திப்பு


முதல்-மந்திரி பட்னாவிஸ் தலைமையில் மாநில பா.ஜனதா மூத்த நிர்வாகிகள் அமித் ஷாவுடன் சந்திப்பு
x
தினத்தந்தி 10 Jun 2019 11:45 PM GMT (Updated: 10 Jun 2019 10:26 PM GMT)

முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் மாநில பா.ஜனதா மூத்த நிர்வாகிகள் டெல்லியில் கட்சியின் தலைவர் அமித்ஷாவை சந்தித்தனர்.

மும்பை,

மராட்டியத்தில் அடுத்த சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்தநிலையில் மாநில பா.ஜனதா மூத்த நிர்வாகிகள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் டெல்லியில் அக்கட்சியின் தலைவர் அமித்ஷாவை சந்தித்து பேசினர். மாநில தலைவர் ராவ்சாகேப் தன்வே மத்திய மந்திரியாக பொறுப்பேற்று உள்ளார். எனவே மராட்டியத்துக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

இதேபோல விரைவில் மாநில மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இந்தநிலையில் மூத்த நிர்வாகிகள் அமித்ஷாவை சந்தித்து பேசியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த சந்திப்பு குறித்து முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், வரும் தேர்தல்களில் பா.ஜனதா வேட்பாளர் மட்டுமின்றி கூட்டணி கட்சி வேட்பாளருக்கும் கடினமாக உழைக்கவேண்டும் என அமித்ஷா கூறினார். அப்போது தான் எல்லா மாநிலங்களிலும் நம்மால் வெற்றி பெறமுடியும் என எங்களிடம் தெரிவித்தார், என்றார்.

இந்த சந்திப்பில் முதல்-மந்திரியுடன் மாநில தலைவர் ராவ்சாகேப் தன்வே, மூத்த மந்திரிகள் சந்திரகாந்த் பாட்டீல், வினோத் தாவ்டே, மும்பை தலைவர் ஆசிஸ் செலார் உள்ளிட்ட 16 மூத்த நிர்வாகிகள் சென்று இருந்தனர்.

இந்த சந்திப்பில் புதிய மாநில தலைவர் நியமனம், மந்திரி சபை விரிவாக்கம் குறித்து பேசப்படவில்லை என அமித்ஷாவை சந்தித்த குழுவில் இடம்பெற்று இருந்த மூத்த நிர்வாகி ஒருவர் கூறினார்.

Next Story