காய்ச்சலுக்காக வழங்கப்பட்ட மாத்திரையில் இரும்பு கம்பி இருந்ததாக கூறி, பவானி அரசு ஆஸ்பத்திரி முற்றுகை- இந்து முன்னணியினர் 23 பேர் கைது


காய்ச்சலுக்காக வழங்கப்பட்ட மாத்திரையில் இரும்பு கம்பி இருந்ததாக கூறி, பவானி அரசு ஆஸ்பத்திரி முற்றுகை- இந்து முன்னணியினர் 23 பேர் கைது
x
தினத்தந்தி 11 Jun 2019 4:00 AM IST (Updated: 11 Jun 2019 5:00 AM IST)
t-max-icont-min-icon

காய்ச்சலுக்காக வழங்கப்பட்ட மாத்திரையில் இரும்பு கம்பி இருந்ததாக கூறி பவானி அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட முயன்ற இந்து முன்னணியினர் 23 பேரை போலீசார் கைது செய்தனர்.

பவானி, 

ஈரோடு மாவட்டம் பவானி திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் வெங்கடேஸ். இவருடைய மனைவி கலையரசி (வயது 34). இந்து முன்னணி உறுப்பினராகவும் உள்ளார். இவருக்கு கடந்த மாதம் 27-ந் தேதி காய்ச்சல் ஏற்பட்டது. இதற்காக இவர் பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றார். அப்போது காய்ச்சல் குணமாவதற்காக ஆஸ்பத்திரி சார்பில் கலையரசிக்கு மாத்திரை வழங்கப்பட்டது. அதை பெற்றுக்கொண்ட அவர் வீட்டுக்கு வந்து மாத்திரையை சாப்பிட்டார். அதில் காய்ச்சல் குணமாகிவிட்டது. காய்ச்சல் குணமாகிவிட்டதால் மீதம் உள்ள ஒரு மாத்திரையை வீட்டில் வைத்திருந்தார்.

இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி கலையரசியின் மகளான மைசாவுக்கு (3) காய்ச்சல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து தனக்கு வழங்கப்பட்ட மாத்திரையில் பாதி அளவை உடைத்து கலையரசி தனது மகள் மைசாவுக்கு கொடுக்க முற்பட்டார். அப்போது அந்த மாத்திரையில் சிறிய இரும்பு கம்பி (ஸ்டேப்ளர் பின் போன்ற சிறிய கம்பி) ஒன்று இருந்ததாக கூறப்படுகிறது. இதை கண்டதும் அவர் அதிர்ச்சி அடைந்தார்.

இந்த நிலையில் பவானி அரசு ஆஸ்பத்திரியில் இருந்து வழங்கப்பட்ட மாத்திரையில் இரும்பு கம்பி இருந்ததை கண்டித்தும், நோயாளிகளுக்கு விபரீத விளைவுகள் இல்லாத தரமான மருந்து, மாத்திரைகளை வழங்கக்கோரியும், உயர்தர சிகிச்சை அளிக்க வேண்டியும் இந்துமுன்னணி சார்பில் 10-ந் தேதி பவானி அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதற்கு போலீசார் அனுமதிக்கவில்லை. எனினும் தடையை மீறி போராட்டம் நடைபெறும் என இந்து முன்னணி சார்பில் அறிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து பவானி அரசு ஆஸ்பத்திரியில் நேற்று ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர்.

இந்தநிலையில் ஈரோடு வடக்கு மாவட்ட இந்து முன்னணி செயலாளர் முருகசேன் தலைமையில், துணைத்தலைவர் ஸ்ரீதர், நகர தலைவர் கோபிநாத், பொதுச்செயலாளர் செந்தில், கலையரசி உள்பட இந்து முன்னணியை சேர்ந்த 23 பேர் தடையை மீறி பவானி அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட வந்தனர். உடனே அங்கு பாதுகாப்புக்கு நின்றுகொண்டிருந்த போலீசார் இந்து முன்னணியினரை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

பின்னர் கைது செய்யப்பட்ட அனைவரும் வேனில் ஏற்றப்பட்டு பவானி காடையாம்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் பவானி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story