பவானி அருகே, வீடு கட்டி தருவதாக கூறி பணம் மோசடி - 2 பெண்கள் உள்பட 5 பேர் கைது
பவானி அருகே வீடு கட்டி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
பவானி,
பவானியை அடுத்த பனங்காட்டூரை சேர்ந்தவர் பிரம்மா. இவருடைய மனைவி லட்சுமி (வயது 32). கூலித்தொழிலாளி. இந்த நிலையில் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு 5 பேர் பனங்காட்டூருக்கு சொகுசு காரில் வந்து உள்ளனர்.
அப்போது அவர்கள் அனைவரும் லட்சுமியை சந்தித்து தங்களை அறிமுகப்படு்த்தி கொண்டனர். பின்னர் அவர்கள் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டி கொடுப்பதற்கான ஏற்பாடுகளை நாங்கள் செய்து வருகிறோம். எனவே உங்களுக்கும், உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் வீடு கட்டி கொடுக்க ஏற்பாடு செய்து தருகிறோம் என்றனர். அதற்காக நீங்கள் முன்பணமாக ரூ.1,500 தர வேண்டும் என்று கேட்டனர். இதை உண்மை என்று நம்பிய லட்சுமி, தான் வைத்திருந்த ரூ.1,500-ஐ முன்பணமாக அவர்களிடம் கொடுத்தார். இதேபோல் அதே ஊரை சேர்ந்த மேலும் 7 பேரும் அந்த 5 நபர்களிடம் தலா ரூ.1,500 கொடுத்தனர்.
ஆனால் அந்த 5 பேரும் வீடு கட்டி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர். மேலும் வீடு கட்டி கொடுக்க கூடுதலாக ஆளுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் வேண்டும் என லட்சுமி உள்பட 8 பேரிடம் அந்த 5 நபர்கள் கேட்டுள்ளனர்.
இவர்களுடைய நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த லட்சுமி இதுபற்றி பவானி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரையும் வலைவீசி ேதடி வந்தனர். இதற்கிடையே அந்த 5 பேரும் பனங்காட்டூருக்கு வந்தனர். அவர்கள் அனைவரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், ‘ அவர்கள் சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த தட்சிணாமூர்த்தி (57), நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சுந்தரம் நகரை சேர்ந்த பி.மணி (59), குமாரபாளையம் வடக்கு காஞ்சிபுரத்தை சேர்ந்த சித்தேஸ்வரன் (36), குமாரபாளையம் சீரங்க செட்டியார் வீதியை சேர்ந்த ராதா (37), குமாரபாளையம் கல்லாங்காட்டு வலசை சேர்ந்த நிர்மலா (38) ஆகியோர் என்பதும், இவர்கள் அனைவரும் சேர்ந்து பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டி தருவதாக கூறி பனங்காட்டூரை சேர்ந்த லட்சுமி உள்பட 8 பேரிடம் தலா ரூ.1,500 என ரூ.12 ஆயிரம் வாங்கி மோசடியில் ஈடுபட்டதும்,’ தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story