திண்டுக்கல்லை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்கக்கோரி விவசாயிகள் போராட்டம், பழனி சப்-கலெக்டரிடம் மனு அளித்தனர்
திண்டுக்கல்லை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்கக்கோரி பழனி சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
பழனி,
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக போதிய அளவு பருவமழை பெய்யாததால் பல இடங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு வறட்சி நிலவுகிறது. எனவே திண்டுக்கல்லை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும். விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், பழனி சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று போராட்டம் நடந்தது. இதற்கு மாநில துணைத்தலைவர் முகமதுஅலி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் செல்வராஜ், ஒன்றிய தலைவர் சின்னத்துரை, செயலாளர் கனகு மற்றும் நிர்வாகிகள், விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர். முன்னதாக அவர்கள் தபால் அலுவலக பகுதியில் இருந்து சப்-கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக வந்தனர். பின்னர் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின்போது, திண்டுக்கல்லை வறட்சி மாவட்டமாக அறிவித்து, விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், 2016-ம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டுத்தொகையை தாமதப்படுத்தாமல் விரைந்து வழங்க வேண்டும், பழனி பகுதியில் உள்ள அணைகள், குளங்கள், வரத்து வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும். கொத்தயம், பெரியதுரையான் ஆகிய இடங்களில் உடனடியாக அணை கட்டும் பணியை தொடங்க வேண்டும். பசும்பாலின் கொள்முதல் விலையை ரூ.40-ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
பின்னர் துணைத்தலைவர் முகமதுஅலி தலைமையில் விவசாயிகள் பழனி சப்-கலெக்டர் அருண்ராஜிடம் இதுகுறித்து மனு அளித்துவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக சப்-கலெக்டர் அலுவலக பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
Related Tags :
Next Story