நாயை மருந்து வைத்து சாகடித்ததால் ஆத்திரம், தொழிலாளி கொன்று புதைப்பு - பட்டதாரி வாலிபர் உள்பட 2 பேர் சிக்கினர்


நாயை மருந்து வைத்து சாகடித்ததால் ஆத்திரம், தொழிலாளி கொன்று புதைப்பு - பட்டதாரி வாலிபர் உள்பட 2 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 10 Jun 2019 10:30 PM GMT (Updated: 10 Jun 2019 11:31 PM GMT)

நாயை மருந்து வைத்து சாகடித்ததால் தொழிலாளியை கொன்று புதைத்த பட்டதாரி வாலிபர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கூடலூர்,

தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளி அருவி அமைந்துள்ளது. இங்கு, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் பூதநாராயணன் கோவில் உள்ளது. அருவியில் குளித்து விட்டு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இந்த கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வது வழக்கம்.

இந்த கோவிலில் சின்னமனூரை அடுத்துள்ள அய்யம்பட்டியை சேர்ந்த மலையாண்டி என்ற பாண்டி (வயது 70) பூசாரியாக இருந்து வந்தார். மற்றொரு பூசாரியாக பாலசுப்பிரமணி உள்ளார்.

இந்தநிலையில் கடந்த மாதம் 4-ந் தேதி நள்ளிரவில் கோவிலுக்குள் புகுந்த 2 மர்ம நபர்கள் உண்டியல் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்றனர். இதை தடுக்க முயன்ற பாண்டியை அரிவாளால் வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த அவர், ரத்த வெள்ளத்தில் கோவில் கருவறை அருகே துடிதுடித்து இறந்தார். மேலும் மற்றொரு பூசாரி பாலசுப்பிரமணியையும் தாக்கி விட்டு மர்மநபர்கள் தப்பியோடி விட்டனர்.

இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பூசாரியை கொலை செய்து தப்பியோடிய மர்மநபர்களை வலைவீசி தேடிவந்தனர். கொலை நடந்து ஒரு மாதத்துக்கு மேல் ஆனதால் மர்மநபர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

இந்தநிலையில் பூசாரி கொலை வழக்கு தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கருநாக்கமுத்தன்பட்டி மெயின்ரோடு பகுதியை சேர்ந்த அஜித்குமார் (வயது 24), பேச்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பிரவீன்குமார் (23) ஆகிய 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் பிரவீன்குமார் பி.ஏ. பட்டதாரி ஆவார்.

விசாரணையில் தாங்கள் பூசாரியை கொலை செய்யவில்லை என்று தெரிவித்தனர். ஆனால் புதையல் தோண்ட பூதம் கிளம்பியது போல, மற்றொரு கொலை வழக்கில் அவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

அதாவது தனது நண்பரான பேச்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மனோஜ் (24) என்பவரை அடித்து கொன்று புதைத்ததாக அவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

கொலை செய்யப்பட்ட மனோஜ், தென்னை மரம் ஏறும் தொழிலாளி. இவரும், அஜித்குமார் மற்றும் பிரவீன்குமாரும் நண்பர்கள். அஜித்குமார் வளர்த்த நாயை மனோஜ் மருந்து வைத்து கொன்றதாக கூறப்படுகிறது. இதனால் மனோஜ் மீது அஜித்குமார் கோபத்தில் இருந்தார். இதனால் அவரை கொலை செய்ய திட்டமிட்டார்.

அதன்படி மனோஜை கொலை செய்ய பிரவீன்குமாரின் உதவியை நாடினார். அவரும் உதவி செய்வதாக தெரிவித்தார். பின்னர் திட்டமிட்டபடி அப்பகுதியில் 3 பேரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். மதுபோதை தலைக்கேறியவுடன் மனோஜை அவர்கள் கொலை செய்தனர்.

பின்னர் 2 பேரும் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் உடலை எடுத்து சென்று கருநாக்கமுத்தன்பட்டி பச்சைக்கிளி கோவில் தோப்பு அருகில் உள்ள ஆற்றுபள்ளம் பகுதியில் புதைத்துள்ளனர்.

இவ்வாறு போலீசார் கூறினர்.

இதையடுத்து கொன்று புதைக்கப்பட்ட மனோஜ்குமாரின் உடலை தோண்டி பிரேத பரிசோதனை செய்ய போலீசார் முடிவு செய்தனர். அதன்படி 2 பேரையும் போலீசார் அங்கு அழைத்து சென்றனர். அப்போது அவர்கள் மனோஜின் உடலை புதைத்த இடத்தை அடையாளம் காட்டினர்.

அதன்பிறகு உத்தமபாளையம் தாசில்தார் சத்தியபாமா, கூடலூர் கிழக்கு கிராம நிர்வாக அலுவலர் கருப்பையா ஆகியோர் முன்னிலையில் மனோஜின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. ஆனால் பிரேத பரிசோதனை செய்ய டாக்டர்கள் உடனடியாக வரவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த மனோஜின் உறவினர்கள், சுருளியாறு மின்நிலையம்-கம்பம் சாலையில் கருநாக்கமுத்தன்பட்டியில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். இதற்கிடையே தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து டாக்டர்கள் வந்து உடலை பிரேத பரிசோதனை செய்தனர்.

இந்த கொலை தொடர்பாக கூடலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தார். கைதான அஜித்குமார் மீது ஏற்கனவே 2 கொலை வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. நாயை மருந்து வைத்து சாகடித்த தொழிலாளியை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story