ஞானபீட விருது பெற்ற கன்னட எழுத்தாளர் நடிகர் கிரீஷ் கர்னாட் திடீர் மரணம்: கர்நாடக அரசு சார்பில் 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு


ஞானபீட விருது பெற்ற கன்னட எழுத்தாளர் நடிகர் கிரீஷ் கர்னாட் திடீர் மரணம்: கர்நாடக அரசு சார்பில் 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு
x
தினத்தந்தி 11 Jun 2019 5:09 AM IST (Updated: 11 Jun 2019 5:11 AM IST)
t-max-icont-min-icon

ஞானபீட விருது பெற்ற எழுத்தாளரும், நடிகருமான கிரீஷ் கர்னாட் நேற்று திடீரென மரணம் அடைந்தார். அவரது மறைவையொட்டி 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

பெங்களூரு,

கர்நாடகத்தை சேர்ந்தவர் புகழ் பெற்ற எழுத்தாளரும், நடிகருமான கிரீஷ் கர்னாட் (வயது 81). கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர். கன்னட எழுத்தாளரான அவர் இலக்கியத்துறையில் வழங்கப்படும் மிக உயரிய விருதான ஞானபீட விருது பெற்றுள்ளார்.

இந்த நிலையில் அவர் பெங்களூரு லாவெல்லி ரோட்டில் உள்ள வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். வயது மூப்பு காரணமாக அவர் நோய் வாய்ப்பட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று காலை சுமார் 8 மணியளவில் அவர் மரணம் அடைந்தார். நாடக ஆசிரியரான அவர், டாக்டர் ரகுநாத் கர்னாட்-கிருஷ்ணபாய் தம்பதிக்கு 3-வது மகனாக 1938-ம் ஆண்டு மே மாதம் 19-ந் தேதி மராட்டிய மாநிலத்தில் உள்ள மாதேரானாவில் பிறந்தார்.

பிறகு அவரது குடும்பத்தினர் கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டத்தில் குடியேறினார். அங்கு தொடக்க கல்வியை முடித்த கிரீஷ் கர்னாட், தார்வாரில் பள்ளி கல்வியை முடித்தார். பிறகு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் அரசியல் படிப்பை முடித்தார்.

1963-ம் ஆண்டு ஆக்ஸ்போர்டு சங்க தலைவராக பணியாற்றினார். சென்னையில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பத்திரிகையில் 7 ஆண்டுகள் பணியாற்றினார். அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தில் கவுரவ பேராசிரியராக ஓராண்டு பணியாற்றினார்.

இந்த பணிகளுக்கிடையே அவர் நாடக ஆசிரியராக திகழ்ந்தார். பல்வேறு நாடகங்களுக்கு அவர் கதை எழுதினார். இந்திய திரைப்பட மற்றும் தூர்தர்ஷன், இசை நாடக அகாடமி தலைவராக அவர் சிறிது காலம் பணியாற்றினார். 1980-ம் ஆண்டு டாக்டர் சரஸ்வதியை அவர் திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். ‘நாக-மண்டல‘, ‘யயதி‘ ‘துக்ளக்‘ ஆகிய நாடக கதைகளை எழுதியுள்ளார்.

1970-ம் ஆண்டு யு.ஆர்.அனந்தமூர்த்தி எழுதிய கதையை கொண்டு எடுக்கப்பட்ட ‘சம்ஷ்கார‘ என்ற கன்னட படத்தின் மூலம் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார். அந்த படத்திற்கு ஜனாதிபதியின் தங்கதாமரை விருது கிடைத்தது. கன்னட நாவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட ‘வம்ச விருக்‌ஷ‘ என்ற படத்திலும் அவர் நடித்தார்.

‘சுவாமி‘ ‘நிஷாந்த்‘ ‘டைகர் ஜிந்தா ஹய்‘, ‘சிவாய்‘ உள்பட பல்வேறு இந்தி படங்களிலும் நடித்துள்ளார். ‘மால்குடி டேஷ்‘ என்ற சின்னத்திரை தொடரிலும் அவர் நடித்தார். முற்போக்கு சிந்தனையாளரான கிரீஷ் கர்னாட் தமிழில் ‘காதலன்‘, ‘ரட்சகன்‘, ‘ஹே ராம்‘ உள்பட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

1974-ம் ஆண்டு அவருக்கு பத்மஸ்ரீ, 1992-ம் ஆண்டு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது. கன்னடத்தில் அவர் எழுதிய நாடகங்கள், ஆங்கிலம் மற்றும் நாட்டின் பிற மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, கிரீஷ் கர்னாட் உள்பட 600 எழுத்தாளர்கள் கையெழுத்திட்டு, பா.ஜனதாவுக்கு ஓட்டுப்போட வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தனர்.

மேலும் மோடி தலைமையிலான மத்திய அரசின் செயல்பாடுகளை அவர் கடுமையாக விமர்சித்து வந்தார். கிரீஷ் கர்னாட்டின் மறைவுக்கு பிரதமர் மோடி, முதல்-மந்திரி குமாரசாமி, முன்னாள் பிரதமர் தேவேகவுடா, துணை முதல்-மந்திரி பரமேஷ்வர், முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா மற்றும் மந்திரிகள், கன்னடம், தமிழ் திரையுலகின் முக்கிய பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கர்நாடக அரசு தரப்பில் மந்திரி டி.கே.சிவக்குமார் பையப்பனஹள்ளியில் உள்ள கல்லஹள்ளி மின் மயானத்தில் வைக்கப்பட்டிருந்த கிரீஷ் கர்னாட்டின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். கிரீஷ் கர்னாட்டுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் கர்நாடக அரசு சார்பில் நேற்று முதல் நாளை (புதன்கிழமை) வரை 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நேற்று அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும் கிரீஷ் கர்னாட் உடல், முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

கிரீஷ் கர்னாட்டின் மறைவையொட்டி விதான சவுதாவில் தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்பட்டு உள்ளது. நேற்று திட்டமிடப்பட்டிருந்த அரசின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன. துக்கம் அனுசரிக்கப்படுவதால், அடுத்த 2 நாட்களுக்கு அரசு சார்பில் எந்த நிகழ்ச்சியும் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கிரீஷ் கர்னாட்டின் உடலுக்கு அவரது வீட்டில் வைத்து அஞ்சலி செலுத்த யாரையும் குடும்பத்தினர் அனுமதிக்கவில்லை. வீட்டின் நுழைவு வாயில் கதவு மூடப்பட்டிருந்தது. அஞ்சலி செலுத்த விரும்புபவர்கள், கல்லஹள்ளி மின் மயானத்திற்கு வருமாறு வேண்டுகோள் விடுத்தனர். அதன்படி முக்கிய பிரமுகர்கள் அங்கு வந்து அஞ்சலி செலுத்தினர்.

மேலும் கிரீஷ் கர்னாட்டின் விருப்பப்படியே எந்த சடங்குகளும் இன்றி மாலை 4 மணியளவில் மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. அரசு மரியாதையை அவரது குடும்பத்தினர் நிராகரித்துவிட்டனர்.


Next Story