எட்டயபுரம் அருகே இருதரப்பினர் மோதல்; பெண்கள் உள்பட 5 பேர் காயம் தாலுகா அலுவலகம் முற்றுகை–போலீஸ் குவிப்பு


எட்டயபுரம் அருகே இருதரப்பினர் மோதல்; பெண்கள் உள்பட 5 பேர் காயம் தாலுகா அலுவலகம் முற்றுகை–போலீஸ் குவிப்பு
x
தினத்தந்தி 11 Jun 2019 9:00 PM GMT (Updated: 11 Jun 2019 1:39 PM GMT)

எட்டயபுரம் அருகே இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் பெண்கள் உள்பட 5 பேர் காயம் அடைந்தனர்.

எட்டயபுரம், 

எட்டயபுரம் அருகே இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் பெண்கள் உள்பட 5 பேர் காயம் அடைந்தனர். இதையடுத்து தாலுகா அலுவலகம் முற்றுகையிடப்பட்டது. போலீசார் குவிக்கப்பட்டனர்.

ஆலோசனை கூட்டம் 

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ளது வீரபட்டி கிராமம். இங்கு உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தின் திருவிழா நடத்துவது தொடர்பாக நேற்று முன்தினம் இரவில் ஒரு தரப்பினர் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதனை அறிந்த அதே பகுதியை சேர்ந்த மற்றொரு தரப்பினர் ஆலோசனை கூட்டம் நடத்த எதிர்ப்பு தெரிவித்தனர். இதில் இருதரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு முற்றவே இருதரப்பை சேர்ந்தவர்களுக்கும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் கார்த்திக் (வயது 31), வடிவேல் மனைவி பேச்சியம்மாள் (40), கருப்பசாமி மனைவி சண்முகலட்சுமி (41) மற்றும் பா.ஜனதா வீரபட்டி கிளை செயலாளர் சவுந்தரபாண்டியன் (42), அன்புராஜ் (50) ஆகிய 5 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்த சவுந்தரபாண்டியன், அன்புராஜ் ஆகியோர் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். மற்ற 3 பேரும் எட்டயபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

முற்றுகை போராட்டம் 

இதுகுறித்து தகவல் அறிந்த பா.ஜனதா மாவட்ட செயலாளர் சிவந்திநாராயணன், மாவட்ட பொதுச்செயலாளர் ராமமூர்த்தி, எட்டயபுரம் நகர தலைவர் நாகராஜன் உள்ளிட்டவர்கள் எட்டயபுரம் வந்தனர். அவர்கள் இந்த பிரச்சினையை சுமூகமாக தீர்த்து வைக்காத காவல்துறையை கண்டித்தும், இந்த மோதலுக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய கோரியும் நேற்று இரவில் எட்டயபுரம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு கோ‌ஷங்கள் எழுப்பினர்கள். இதனை அறிந்த எட்டயபுரம் தாசில்தார் வதனாள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர் கூறும் போது, இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காணப்படும் என்று தெரிவித்தார். இதனையடுத்து அவர்கள் நேற்று அதிகாலையில் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

பேச்சுவார்த்தை 

இந்த நிலையில் நேற்று காலையில் எட்டயபுரம் பாரதி மண்டபம் முன்பு பா.ஜனதாவினர் குவிந்தனர். அவர்களிடம் விளாத்திகுளம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், தாசில்தார் வதனாள், வருவாய் ஆய்வாளர் பிரபாகரன், எட்டயபுரம் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் உள்ளிட்டவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அசம்பாவிதங்கள் நடக்காமல் இருப்பதற்காக எட்டயபுரம் பாரதி மண்டபம் முன்பு சுமார் 100–க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.


Next Story