கும்பகோணத்தில் வறண்ட நிலையில் பொற்றாமரை குளம் பக்தர்கள் வேதனை


கும்பகோணத்தில் வறண்ட நிலையில் பொற்றாமரை குளம் பக்தர்கள் வேதனை
x
தினத்தந்தி 12 Jun 2019 4:30 AM IST (Updated: 12 Jun 2019 12:34 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணத்தில் பொற்றாமரை குளம் வறண்ட நிலையில் உள்ளதால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

கும்பகோணம்,

கும்பகோணம்- தஞ்சாவூர் சாலையில் சாரங்கபாணி கோவிலுக்கு சொந்தமான பொற்றாமரை குளம் உள்ளது. உலக பிரசித்தி பெற்ற மகாமக பெருவிழாவின் போது மகாமக குளத்துக்கு அடுத்தபடியாக பொற்றாமரை குளத்துக்கு அதிக அளவு பக்தர்கள் நீராட வருவார்கள். மேலும் இந்த குளத்தில் தெப்பஉற்சவம் மிகவும் சிறப்பாக நடைபெறும். இதற்காக சுமார் 30 அடி, நீள அகலத்தில் தெப்பம் செய்யப்பட்டு அதில் சாரங்கராஜாவை வைத்து குளத்தை சுற்றி வருவார்கள்.

தண்ணீர்

கும்பகோணத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் கும்பகோணம் பொற்றாமரை குளத்தை பார்க்காமல் செல்ல மாட்டார்கள். இந்த நிலையில் கடந்த மகாமகத்தின்போது பல லட்ச ரூபாய் மதிப்பில் காவிரி ஆற்றிலிருந்து சுமார் 1 கிலோமீட்டர் தூரத்துக்கு குழாய் பதிக்கப்பட்டு தண்ணீர் கொண்டுவரப்பட்டது. ஆனால் அந்த திட்டம் பல்வேறு இடையூறுகளால் தோல்வியடைந்தது. இதைத் தொடர்ந்து கடந்த ஓரு ஆண்டுக்கு முன்பு மீண்டும் அதே திட்டத்தை தன்னார்வ தொண்டு அமைப்புகளின் பொறுப்பாளர்கள் தன்னார்வ அடிப்படையில் வாய்க்கால் மூலம் தண்ணீர் கொண்டு வர முயற்சி செய்தார்கள். ஆனால் அந்த திட்டமும் பாதியிலேயே நின்றது.

வறண்ட நிலையில்....

இந்த நிலையில் உலகப்புகழ்பெற்ற சாரங்கபாணி கோவிலுக்கு சொந்தமான பொற்றாமரை குளம் வறண்டு உள்ளது பக்தர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணத்தில் உள்ள சேச குளம், விராகபெருமாள் கோவில் குளம், மகாமகக்குளம் ஆகிய குளங்கள் சிறந்த முறையில் தூர் வாரப்பட்டு தற்போது சுமார் 6 அடி வரை தண்ணீர் உள்ளது. இந்த நிலையில் பொற்றாமரை குளம் மட்டும் தண்ணீர் இல்லாமல் வறண்ட நிலையில் உள்ளது பக்தர்களிடையே மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. எனவே வறண்ட நிலையில் உள்ள பொற்றாமரை குளத்தில் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story