மத்திய அரசு பணி வாங்கித்தருவதாக கூறி இளம்பெண்ணிடம் ரூ.3½ லட்சம் மோசடி தி.மு.க. பிரமுகர் கைது


மத்திய அரசு பணி வாங்கித்தருவதாக கூறி இளம்பெண்ணிடம் ரூ.3½ லட்சம் மோசடி தி.மு.க. பிரமுகர் கைது
x
தினத்தந்தி 11 Jun 2019 10:15 PM GMT (Updated: 11 Jun 2019 7:28 PM GMT)

மத்திய அரசு நிறுவனத்தில் நூலகர் பணி வாங்கித்தருவதாக கூறி இளம்பெண்ணிடம் ரூ.3½ லட்சம் மோசடி செய்ததாக தி.மு.க. பிரமுகர் கைது செய்யப்பட்டார்.

திருச்சி,

திருச்சி கருமண்டபம் மாந்தோப்பு 1-வது தெருவை சேர்ந்தவர் அமருதீன். இவரது மனைவி நிஷானா(வயது 25). இவர், அரசு வேலைக்கான முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். திருச்சி பொன்நகர் காமராஜபுரத்தை சேர்ந்தவர் கணேசன்(50). இவர் தி.மு.க. மாவட்ட பிரதிநிதியாக உள்ளார்.

இவர், கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிஷானாவை அணுகி, திருச்சி துவாக்குடியில் உள்ள மத்திய அரசின் ஐ.ஐ.எம். நிறுவனத்தில் நூலகர் பணி வாங்கித்தருவதாக கூறியுள்ளார். அதற்கு குறிப்பிட்ட தொகையை செலவு செய்ய வேண்டியது வரும் என்றும் கணேசன் தெரிவித்துள்ளார்.

ரூ.3½ லட்சம் மோசடி

அதற்கு சம்மதம் தெரிவித்த நிஷானா, 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் தனது வீட்டுக்கு கணேசனை வரவழைத்து ரூ.3½ லட்சம் கொடுத்தார். பணத்தை பெற்றுக்கொண்ட அவர், விரைவில் வேலைக்கான ஆணை வரும் என்று சொன்னதாக கூறப்படுகிறது.

ஆனால் பல மாதங்கள் ஆகியும், வேலைக்கான எவ்வித உத்தரவும் வரவில்லை என்பதால் கணேசனை சந்தித்து நிஷானா, தான் கொடுத்த பணத்தை திரும்ப தருமாறு கேட்டுள்ளார். ஆனால், அவர் வேலைக்கான எவ்வித முயற்சியும் செய்யாமல் ரூ.3½ லட்சத்தை மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

தி.மு.க. பிரமுகர் கைது

இதனால், ஏமாற்றம் அடைந்த நிஷானா, திருச்சி மாநகர குற்றம் மற்றும் போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் மயில்வாகனனை சந்தித்து புகார் கொடுத்தார். இதுபற்றி உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி திருச்சி மாநகர் குற்றப்பிரிவு போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார்.

அதன்பேரில், தி.மு.க. பிரமுகர் கணேசன் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 420, 465, 468 மற்றும் 471 ஆகிய 4 பிரிவுகளின் கீழ் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். பின்னர் கணேசனை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

Next Story