பெரம்பலூர் நகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்


பெரம்பலூர் நகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 12 Jun 2019 4:30 AM IST (Updated: 12 Jun 2019 1:14 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் நகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு ஒப்பந்த தொழிலாளர்களுக்கு உரிய நேரத்திற்குள் ஊதியம் வழங்கக்கோரியும், பிடித்தம் செய்த சேமநலநிதியுடன், நகராட்சி நிர்வாகம் செலுத்தும் சேமநல நிதி குறித்த விபரங்களை வழங்க வலியுறுத்தியும் ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே சில மாதங்களாக பிடித்தம் செய்துள்ள சேமநல நிதியை மாநில நிதிக்கணக்கில் மின்னணு முறையில் செலுத்தாத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து துப்புரவு தொழிலாளர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கோ‌‌ஷங்களை எழுப்பினர்.

பேச்சுவார்த்தை

நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ராதா மற்றும் துப்புரவு ஆய்வாளர் கணேசன் ஆகியோர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது நகராட்சி நிர்வாகத்தினர் இன்னும் ஓரிரு நாளில் சம்பளம் வழங்கப்படும் என்றும், ஓரிரு வாரத்தில் சேமநல நிதி செலுத்தப்படும் என்றும் உறுதிஅளித்தனர். இதில் சமாதானம் அடையாத துப்புரவு தொழிலாளர்கள் அங்கிருந்து புறப்பட்டு மாவட்ட கலெக்டர் சாந்தாவிடம் இதுகுறித்து முறையிட்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story