மாட்டுவண்டி தொழிலாளர்களை மணல் அள்ள அனுமதிக்க வேண்டும் கரூர் கலெக்டரிடம் எம்.பி.-எம்.எல்.ஏ. மனு


மாட்டுவண்டி தொழிலாளர்களை மணல் அள்ள அனுமதிக்க வேண்டும் கரூர் கலெக்டரிடம் எம்.பி.-எம்.எல்.ஏ. மனு
x
தினத்தந்தி 11 Jun 2019 11:00 PM GMT (Updated: 11 Jun 2019 8:02 PM GMT)

மாட்டு வண்டி தொழிலாளர்களை மணல் அள்ள அனுமதிக்க வேண்டும் என்று கரூர் கலெக்டர் அன்பழகனிடம் எம்.பி.-எம்.எல்.ஏ. சேர்ந்து மனு கொடுத்தனர்.

கரூர்,

கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், அரவக்குறிச்சி எம்.எல்.ஏ.வுமான செந்தில்பாலாஜி மற்றும் மாட்டு வண்டி தொழிலாளர்கள் கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து கலெக்டர் அன்பழகனை சந்தித்து நேற்று மாலை கோரிக்கை மனு கொடுத்தனர்.

அதில், கரூர் மாவட்டத்தில் வசித்து வரும் விவசாய கூலித்தொழிலாளர்கள் மற்றும் கால்நடை வளர்ப்பு மூலம் பிழைப்பு நடத்தி வரும் ஏழை, எளிய மக்கள் விவசாயம் பொய்த்து போனதால் காவிரி மற்றும் அமராவதி ஆறுகளில் மணல் அள்ளி உள்ளூர் கட்டுமான பணிகளுக்கு வினியோகம் செய்து பிழைப்பு நடத்தி வந்தனர்்.

கட்டுமான பணிகளில் தொய்வு

இந்தநிலையில் கரூர் மாவட்ட நிர்வாகம் மணல் அள்ள தடை செய்துள்ளதால், இதனை நம்பியுள்ள சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி கட்டுமான பணிகளிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது.

எனவே, காவிரி மற்றும் அமராவதி ஆறுகளில் மாட்டு வண்டி தொழிலாளர்களை மணல் அள்ள அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர். மனுவை பெற்ற கலெக்டர், பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் இதுகுறித்து பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

நீதிமன்றத்தில் வழக்கு

பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த செந்தில் பாலாஜி, கரூர் மாவட்ட காவிரி மற்றும் அமராவதி ஆறுகளில் உள்ளூர் தேவைகளுக்கு மாட்டு வண்டியில் தொழிலாளர்கள் மணல் அள்ளி வந்தனர். தற்போது மணல் அள்ளுவதில் தவறான நடைமுறை பின்பற்றப்படுகிறது.

வருகிற 16-ந் தேதிக்குள் மணல் அள்ள அனுமதிக்காவிட்டால் 17-ந் தேதி ஐகோர்ட்டு மதுரை கிளையில் வழக்கு தொடருவோம் என்றார். அப்போது தி.மு.க. மாநில நெசவாளர் அணி தலைவர் நன்னியூர் ராஜேந்திரன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் சின்னசாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Next Story