விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்கப்பட்டதில் ஏற்பட்ட குழப்பத்திற்கு தேசிய வங்கிகளே காரணம்: முதல்-மந்திரி குமாரசாமி குற்றச்சாட்டு


விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்கப்பட்டதில் ஏற்பட்ட குழப்பத்திற்கு தேசிய வங்கிகளே காரணம்: முதல்-மந்திரி குமாரசாமி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 11 Jun 2019 11:00 PM GMT (Updated: 11 Jun 2019 8:04 PM GMT)

விவசாய கடன் தொகை, விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டதில் ஏற்பட்ட குழப்பத்திற்கு தேசிய வங்கிகளே காரணம் என்று முதல்-மந்திரி குமாரசாமி குற்றம்சாட்டினார்.

பெங்களூரு,

பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி குமாரசாமி கலந்து கொண்டு பேசியதாவது:-

யாதகிரி மாவட்டத்தில் விவசாய கடன் தள்ளுபடி திட்டத்தில் விவசாயிகளின் வங்கி கணக்குகளில் கடன் தொகை வரவு வைக்கப்பட்டது. அந்த தொகை மீண்டும் எடுத்துக் கொள்ளப்பட்டதாக மாநில அரசை குறை கூறி ெதாலைக்காட்சி ஊடகங்கள் காலையில் இருந்து செய்திகளை வெளியிட்ட வண்ணம் இருக்கின்றன.

கடனை தீர்க்க மாநில அரசு செலுத்திய தொகை, விவசாயிகளின் வங்கி கணக்கில் இருந்து திரும்ப எடுக்கப்பட்டுள்ளது. இதற்கும், மாநில அரசுக்கும் தொடர்பு இல்லை. இந்த குழப்பத்திற்கு தேசிய வங்கிகளே காரணம். ஆனால் மாநில அரசை குறை கூறி ஊடகங்கள் செய்திகளை வெளியிடுகின்றன.

வங்கிகளால் நடந்த தவறுகளுக்கு அரசு மீது ஊடகங்கள் ஏன் புழுதி வாரி இறைக்கின்றன. பிரதமர் மோடியை புகழ்ந்து தினமும் செய்திகளை வெளியிடுகிறார்கள். வங்கிகள் செய்த குறைகளை பற்றி மக்களுக்கு தெரிவியுங்கள். கர்நாடகம் வளர வேண்டுமா? அல்லது பாழாக வேண்டுமா? என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.

உண்மையற்ற செய்திகளை தினமும் வெளியிட்டு நீங்கள் என்ன சாதித்துவிடுவீர்கள். இந்த அரசு மீது பொய்களை சொல்லி நீங்கள் என்ன செய்துவிட போகிறீர்கள். மோடியை புகழ்ந்து செய்திகளை வெளியிடும் நீங்கள், அவரிடம் போய் வங்கி குறைகளை சொல்லுங்கள். பொய்யான தகவல்களை வெளியிட்டு மக்களின் கவனத்தை திசை திருப்ப வேண்டாம்.

விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்திய பணம் வாபசாகி உள்ளது. வங்கிகள் செய்த தவறால் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் விவசாயிகளின் வங்கி கணக்கில் கடன் தொகை வரவு வைத்த பிறகு, அந்த தொகை சரியாக போய் சேர்ந்துள்ளதா? என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்கிறார்கள்.

அவ்வாறு ஆய்வு செய்தபோது தான், வங்கிகள் செய்த தவறு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நடந்த தவறு குறித்து விளக்கம் அளிக்கும்படி சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் இதுவரை 13 ஆயிரத்து 988 விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்ட கடன் தொகை விஷயத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக வருகிற வருகிற 14-ந் தேதி அதிகாரிகளின் ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விவசாய கடன் தள்ளுபடி விஷயத்தில் கர்நாடக அரசு மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகிறது. தேர்தலுக்கும், இந்த குழப்பத்திற்கும் தொடர்பு இல்லை.

விவசாய கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் தேசிய வங்கிகளில் இதுவரை 7 லட்சத்து 49 ஆயிரம் விவசாயிகளின் கடன் தொகை திருப்பி செலுத்தப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகளில் 11 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்துள்ளோம்.

கடன் தள்ளுபடிக்கு இதுவரை ரூ.4 ஆயிரம் கோடிக்கும் அதிகமான தொகையை விடுவித்துள்ளோம். கடன் தள்ளுபடிக்கு தற்போது ரூ.25 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு குமாரசாமி கூறினார்.


Next Story