4 பேர் பணியிடை நீக்கத்தை கண்டித்து கரூர் அரசு மருத்துவமனையில் நர்சுகள் போராட்டம்


4 பேர் பணியிடை நீக்கத்தை கண்டித்து கரூர் அரசு மருத்துவமனையில் நர்சுகள் போராட்டம்
x
தினத்தந்தி 11 Jun 2019 11:00 PM GMT (Updated: 11 Jun 2019 8:08 PM GMT)

4 பேர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து கரூர் அரசு மருத்துவமனையில் நர்சுகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர்,

கரூரில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 100-க்கும் மேற்பட்ட நர்சுகள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். தங்களுக்கு, நர்சுகள் அல்லாதோருக்கான பணியையும் சேர்த்து வழங்கி வேலைப்பளுவை அதிகரிப்பதாகவும், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி கடந்த 5-ந் தேதி மருத்துவமனையில் தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கத்தின் கரூர் கிளை சார்பில் நர்சுகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் டீன் ரோஸிவெண்ணிலா, கரூர் வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி, துணை போலீஸ் சூப்பிரண்டு கும்மராஜா ஆகியோர் விசாரணை மேற்கொண்டு அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

நர்சுகள் போராட்டம்

இந்தநிலையில் நேற்று மதியம் கரூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் திடீரென, பணியை முடித்த நர்சுகள் ஒன்று கூடி திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள், ஒழுங்கீன செயலில் ஈடுபட்டதாக கூறி நர்சுகள் நல்லம்மாள், செல்வராணி, தனலட்சுமி மற்றும் கார்த்தி ஆகிய 4 பேரை திடீரென மருத்து வமனை நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்தது கண்டிக்கத்தக்கது.

நாங்கள் உரிய முறையில் தான் பணியில் ஈடுபட்டு வருகிறோம். எங்களது கோரிக்கைகளை முன்வைத்ததற்கான பழிவாங்கும் நடவடிக்கையே இது.. எனவே இந்த பணியிடை நீக்கத்துக்கான உத்தரவினை திரும்பபெற வேண்டும் என நர்சுகள் வலியுறுத்தினர்.

போலீசார் குவிப்பு

இதற்கிடையே நர்சுகள் மறியலுக்கு முயற்சி செய்வதாக தகவல் பரவியதையடுத்து அதிவிரைவுபடை போலீசார் அங்கு பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். மேலும் துணை போலீஸ் சூப்பிரண்டு கும்மராஜா நர்சுகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அனுப்பி வைத்தார்.

இந்த சம்பவத்தினால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது. பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படும் நல்லம்மாள் உள்பட 4 பேரும் தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கத்தில் பொறுப்பில் உள்ளவர்கள் என்று கூறப்படுகிறது.

Next Story