டெல்லியில் ராகுல் காந்தியுடன் தேவேகவுடா சந்திப்பு: கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் மீது புகார்


டெல்லியில் ராகுல் காந்தியுடன் தேவேகவுடா சந்திப்பு: கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் மீது புகார்
x
தினத்தந்தி 11 Jun 2019 11:15 PM GMT (Updated: 11 Jun 2019 8:09 PM GMT)

டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை நேரில் சந்தித்த தேவேகவுடா, கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் மீது புகார் தெரிவித்தார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி அரசு நடந்து வருகிறது. குமாரசாமி முதல்-மந்திரியாக உள்ளார். மந்திரிசபையில் தற்போது 3 இடங்கள் காலியாக உள்ளன. அதில் 2 இடங்கள் ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கும், ஒரு இடம் காங்கிரசுக்கும் உள்ளது.

மந்திரி பதவி கிடைக்காததால் அதிருப்தியில் உள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சிலர் பா.ஜனதாவுக்கு தாவ திட்டமிட்டுள்ளனர். இதனால் கூட்டணி அரசுக்கு சிக்கல் ஏற்படும் நிலை உள்ளது. தங்களுக்கு மந்திரி பதவி கொடுத்தால், கூட்டணி அரசை ஆதரிப்பதாக சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் கூறுகிறார்கள்.

இந்த நிலையில் மந்திரிசபை விரிவாக்கம் வருகிற 14-ந் தேதி நடக்கிறது. இதில் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 2 பேருக்கும் மந்திரி பதவி வழங்க குமாரசாமி முடிவு செய்துள்ளார். ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு உள்ள 2 இடங்களையும் சுயேச்சைகளுக்கு வழங்க குமாரசாமி முடிவு செய்தார்.

தேவேகவுடா தலையிட்டு, கூட்டணி தர்மப்படி காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் தலா ஒரு இடத்தை சுயேச்சைகளுக்கு விட்டுக்கொடுக்க வேண்டும் என்று கூறினார். இதற்கு கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை தேவேகவுடா டெல்லியில் சந்தித்து பேசினார். அப்ேபாது கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் சிலர், கூட்டணி அரசுக்கு இடையூறு செய்வதாக தேவேகவுடா புகார் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மந்திரிசபை விரிவாக்கம் குறித்தும் அவர்கள் ஆலோசனை நடத்தினர்.


Next Story