சூரத் தீ விபத்து எதிரொலி: நாமக்கல்லில் தீயணைப்புத்துறையினர் விழிப்புணர்வு முகாம்


சூரத் தீ விபத்து எதிரொலி: நாமக்கல்லில் தீயணைப்புத்துறையினர் விழிப்புணர்வு முகாம்
x
தினத்தந்தி 11 Jun 2019 10:45 PM GMT (Updated: 11 Jun 2019 8:58 PM GMT)

சூரத் தீ விபத்து எதிரொலியாக நாமக்கல்லில் தீயணைப்புத்துறையினர் பள்ளி மாணவர்கள் முன்னிலையில் செயல்விளக்கம் செய்து காட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

நாமக்கல்,

குஜராத் மாநிலம் சூரத் நகருக்கு உட்பட்ட சர்தானாவில் கடந்த மாதம் 24-ந் தேதி பயிற்சி மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 20 மாணவர்கள் பரிதாபமாக இறந்தனர். மேலும் 16 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதன் எதிரொலியாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பள்ளிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணர்வு முகாம்களை நடத்தும்படி தமிழக தீயணைப்புத்துறை இயக்குனர் காந்திராஜன் உத்தரவிட்டு உள்ளார்.

அதன் ஒரு பகுதியாக நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, நாமக்கல் நகராட்சி அலுவலகம், தனியார் நூற்பாலை உள்ளிட்ட இடங்களில் நாமக்கல் மாவட்ட தீயணைப்புத்துறையினர் நேற்று தீ விபத்தை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த விழிப்புணர்வு முகாம்களை நடத்தினர்.

செயல்விளக்கம்

முன்னதாக நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் அழகர்சாமி தலைமையில் நிலைய அலுவலர்கள் கனகராஜ், சிவக்குமார், ராதாகிருஷ்ணன், பொன்னுசாமி மற்றும் தீயணைப்புத்துறை வீரர்கள் என 30 பேர் கலந்து கொண்டு செயல்விளக்கம் செய்து காட்டினர்.

அப்போது வீடுகளில் கியாஸ் சிலிண்டர், தொலைக்காட்சி பெட்டி ஆகியவற்றில் தீப் பற்றி எரிந்தால் அதை எவ்வாறு அணைப்பது? என்பது குறித்தும், கட்டிடம் மற்றும் மரங்கள் சாய்ந்து விபத்துகள் ஏற்படும்போது இடர்பாடுகளில் சிக்கி உள்ளவர்களை எவ்வாறு மீட்பது? என்பதையும் அவர்கள் செய்து காட்டினர்.

மாணவர்கள் பங்கேற்பு

மேலும் தற்போது புதிதாக அறிமுகம் செய்யப்பட்டு உள்ள தீ அணைப்பு பந்தை கொண்டு சிறிய அளவிலான அறையில் தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு அணைப்பது? என்பது குறித்தும், கயிறு, ஏணி, ஏர்பலூன் ஆகியவற்றின் பயன்பாடு குறித்தும் மாணவர்களுக்கு தீயணைப்புத்துறையினர் எடுத்து கூறினர்.

பின்னர் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை தீயை அணைக்க வைத்தும் தீயணைப்புத்துறையினர் செயல்விளக்கம் செய்து காட்டினர். இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story