காடையாம்பட்டியில் ஜமாபந்தி: 145 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் ரோகிணி வழங்கினார்


காடையாம்பட்டியில் ஜமாபந்தி: 145 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் ரோகிணி வழங்கினார்
x
தினத்தந்தி 11 Jun 2019 11:00 PM GMT (Updated: 11 Jun 2019 9:14 PM GMT)

காடையாம்பட்டியில் நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் 145 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ரோகிணி வழங்கினார்.

சேலம்,

சேலம் மாவட்டத்தில் உள்ள 13 தாலுகாக்களில் நேற்று ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை, சாதிசான்றிதழ், வாரிசு சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அதிகாரிகளிடம் கொடுத்தனர்.

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சியை கலெக்டர் ரோகிணி தொடங்கி வைத்தார். இதில் மொத்தம் 587 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டப்பட்டது.

நலத்திட்ட உதவிகள்

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் ரூ.1 லட்சத்து 68 ஆயிரத்து 500 மதிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்திய ஸ்கூட்டர், சக்கர நாற்காலிகள், மாதாந்திர உதவிக்கான உத்தரவு ஆணைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ரோகிணி வழங்கினார்.

இதேபோல் வருவாய்த் துறையின் சார்பில் ரூ.1 லட்சத்து 77 ஆயிரத்து 520 மதிப்பில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் பயனாளிகளுக்கு அம்மா குழந்தைகள் நல பெட்டகம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவிகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும், தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண்மைத்துறையின் சார்பில் ரூ.81 ஆயிரம் மதிப்பில் விவசாயிகளுக்கு விசை தெளிப்பான் மானியம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. இந்த ஜமாபந்தியில் மொத்தம் ரூ.4 லட்சத்து 27 ஆயிரத்து 620 மதிப்பில் 145 பேருக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ரோகிணி வழங்கினார். அனைத்து தாலுகாவிலும் ஜமாபந்தி இன்றும்(புதன்கிழமை), நாளையும்(வியாழக்கிழமையும்) நடக்கிறது.

எடப்பாடி

இதேபோல எடப்பாடி தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர் தலைமை தாங்கினார். தாசில்தார் கேசவன், வட்ட வழங்கல் அலுவலர் ரேவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பூலாம்பட்டி, பக்கநாடு, ஆடையூர், சித்தூர், வெள்ளரிவெள்ளி, நெடுங்குளம் உள்ளிட்ட கிராமங்களின் கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டன. மேலும் பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.

ஏற்காடு

ஏற்காடு தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நேற்று நடைபெற்றது. சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் சரோஜாதேவி கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். மேலும் முதியோர், விதவைகள், மாற்றுத்திறனாளிகள் உள்பட பலர் கலந்து கொண்டு மொத்தம் 13 மனுக்கள் வழங்கினர்.


Next Story