ஏற்காடு ஏரியில் விசைப்படகு சவாரி நிறுத்தம்


ஏற்காடு ஏரியில் விசைப்படகு சவாரி நிறுத்தம்
x
தினத்தந்தி 11 Jun 2019 10:30 PM GMT (Updated: 11 Jun 2019 9:17 PM GMT)

ஏற்காடு ஏரியில் விசைப் படகு சவாரி நிறுத்தப்பட்டுள்ளது.

ஏற்காடு,

ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.

அவர்கள் ஏற்காடு ஏரிக்கு சென்று படகு சவாரி செய்து மகிழ்கிறார்கள். இதனால் விடுமுறை தினங்களில் ஏரியில் படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதும். இங்கு 5 விசைப்படகுகள், 5 துடுப்பு படகுகள், 60 மிதிபடகுகள் இயக்கப்பட்டு வருகின்றன.

விசைப்படகு சவாரி நிறுத்தம்

ஏற்காடு ஏரி ஊராட்சி ஒன்றியத்துக்கு சொந்தமானது. இந்த ஏரியில் சுற்றுலாத்துறை சார்பில் படகு சவாரி நடத்தப்பட்டு வருகிறது. ஏற்காடு ஊராட்சி ஒன்றியம் சார்பில் நீர் ஏற்றும் நிலையம் அமைத்து ஏற்காடு டவுன், லாங்கில்பேட்டை, ஜெரினாகாடு போன்ற பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது போதிய மழை பெய்யாததால் ஏரியில் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதனால் மேற்கண்ட இடங்களில் வினியோகம் செய்யப்படும் குடிநீர் கலங்கலாக வருவதாகவும், இதன் காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகவும் மாவட்ட கலெக்டர் ரோகிணியிடம் புகார் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஏற்காடு படகு இல்லத்தில் விசைப் படகு சவாரியை தற்காலிகமாக நிறுத்த கலெக்டர் ரோகிணி உத்தரவிட்டார். அடுத்து மழை பெய்து ஏரியில் நீர்மட்டம் உயரும் வரை இந்த தடை நீடிக்கும் என தெரிகிறது.

மிதி படகு

இதைத்தொடர்ந்து ஏரியின் கரையோரம் விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் மிதி படகு, துடுப்பு படகு சவாரி வழக்கம் போல நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story