வேறு ஊருக்கு குடிநீர் கொண்டு செல்ல எதிர்ப்பு: தரைமட்ட தொட்டிக்காக தோண்டப்பட்ட குழியை பொதுமக்கள் மூடினர்


வேறு ஊருக்கு குடிநீர் கொண்டு செல்ல எதிர்ப்பு: தரைமட்ட தொட்டிக்காக தோண்டப்பட்ட குழியை பொதுமக்கள் மூடினர்
x
தினத்தந்தி 11 Jun 2019 11:15 PM GMT (Updated: 11 Jun 2019 9:30 PM GMT)

கோபி அருகே வேறு ஊருக்கு குடிநீர் கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்து ஊர் பொதுமக்கள் ஒன்று திரண்டு வந்து தரைமட்ட தொட்டிக்காக தோண்டப்பட்ட குழியை மூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கடத்தூர்,

கோபி அருகே உள்ள கிராமம் சின்னக்குளம். இந்த பகுதியில் இருந்து ஆழ்குழாய் கிணறு மூலம் அருகில் உள்ள கெட்டிச்செவியூருக்கு தண்ணீர் கொண்டு செல்ல அரசின் சார்பில் முடிவு செய்யப்பட்டது. இதற்காக சின்னக்குளம் பகுதியில் தரைமட்ட குடிநீர் தொட்டி கட்டுவதற்காக குழி தோண்டும் பணி நடைபெற்று வந்தது. சுமார் 6 அடி ஆழத்துக்கு வட்ட வடிவில் மிகப்பெரிய குழி தோண்டப்பட்டது.

இந்த நிலையில் சின்னக்குளம், செல்லிபாளையம், கணபதிபாளையம், கலிங்கியம், அவ்வையார்பாளையம், தங்கமலைக்கரடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சின்னக்குளம் பகுதியில் தரைமட்ட குடிநீர் தொட்டி அமைத்து ஆழ்குழாய் கிணறு மூலம் தண்ணீர் கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் பணி தொடர்ந்து நடந்து வந்தது.

இதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஒன்று திரண்டு வந்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனை சந்தித்து மனு அளித்தனர்.

அந்த மனுவில், ‘சின்னக்குளம் பகுதியில் தரைமட்ட தொட்டி அமைத்து ஆழ்குழாய் கிணறு மூலம் தண்ணீர் கொண்டு சென்றால் எங்கள் பகுதியில் உள்ளவர்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்படும். எனவே இந்த திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும்,’ என்று குறிப்பிட்டிருந்தனர்.

இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் கதிரவன் நேற்று காலை 6.45 மணி அளவில் சின்னக்குளம் பகுதிக்கு வந்து தரைமட்ட குடிநீர் தொட்டி அமைப்பதற்காக தோண்டப்பட்ட குழியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதுபற்றி அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஒன்று திரண்டு வந்து கலெக்டர் கதிரவனை சந்தித்து, இங்கு குடிநீர் தொட்டி அமைக்க குழி தோண்டக்கூடாது என கோரிக்கை விடுத்தனர்.

அப்போது அவர்கள் கலெக்டர் கதிரவனிடம் கூறுகையில், ‘சின்னக்குளம், செல்லிபாளையம், கணபதிபாளையம், கலிங்கியம், அவ்வையார்பாளையம், தங்கமலைக்கரடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு தற்போது குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைத்து வருகிறது. கெட்டிச்செவியூர் பகுதிக்கு குடிநீர் கொண்டு செல்வதற்காக இங்கு ஆழ்குழாய் கிணறு அமைத்தால் எங்கள் பகுதியில் உள்ள ஆழ்குழாய் கிணறுகள் வற்றிப்போகும்.

இதனால் எங்கள் பகுதியில் உள்ளவர்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். எனவே இங்கிருந்து குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்தை கைவிடவேண்டும்,’ என்றனர். இதற்கு கலெக்டர் கதிரவன் பதில் அளிக்கையில், ‘இன்னும் சில நாட்களில் இதுதொடர்பாக கூட்டம் நடத்தி உரிய நல்ல முடிவு எடுக்கப்படும்,’ என்றார். பின்னர் அவர் அங்கிருந்து காரில் சென்றுவிட்டார்.

இதற்கிடையே கலெக்டர் வந்த தகவல் சுற்றுவட்டார பகுதியில் பரவியது. இதுபற்றி அறிந்ததும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான ஆண்கள், பெண்கள், மாணவ- மாணவிகள் உள்பட பலர் தரைமட்ட குடிநீர் தொட்டிக்காக குழி தோண்டும் இடத்துக்கு ஒன்று திரண்டு வந்தனர். ஆனால் அதற்குள் கலெக்டர் கதிரவன் அங்கிருந்து சென்றுவிட்டார்.

பின்னர் பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சுமார் 6 அடி ஆழத்துக்கு வட்ட வடிவில் பெரிதாக தோண்டப்பட்ட குழியை மூட தொடங்கினர். குழியை மூடுவதற்காக பொதுமக்கள் பலரும் தங்கள் கைகளில் கலவை சட்டி, மண் வெட்டி போன்றவற்றை எடுத்து வந்திருந்தனர். பின்னர் அவர்கள் கட்டிட தொழிலாளிகள் போன்று வரிசையாக நின்று மண், கற்களை கலவை சட்டியில் கடத்தி குழியில் அள்ளிப்போட்டனர். இதற்காக குழியின் மேல் பகுதியில் கொட்டப்பட்டு கிடந்த மண், கற்கள் மற்றும் கட்டைகளை பொதுமக்கள் பயன்படுத்தினர்.

காலை 7.30 மணிக்கு தொடங்கிய இந்த பணி நண்பகல் 2 மணி வரை நடைபெற்றது. ஊரே ஒன்று திரண்டு வந்து இந்த பணியில் ஈடுபட்டதால் மிகப்பெரிய குழி உடனடியாக மூடப்பட்டது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதிகாரிகளின் பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்படவில்லை. காலையில் இருந்தே குழியை மூடும் பணி நடந்ததால் அவர்களுக்கு தேவையான உணவு அங்கேயே சமைத்து கொடுக்கப்பட்டது. இந்த சமையல் வேலையில் ஆண்கள், பெண்கள் என பலரும் ஈடுபட்டனர்.

ஊர்மக்களே ஒன்று சேர்ந்து தரைமட்ட குடிநீர் தொட்டிக்காக தோண்டப்பட்ட குழியை மூடிய சம்பவம் கோபி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story