மாவட்ட செய்திகள்

திருப்பரங்குன்றம் அருகே மின்சாரம் இன்றி இருளில் தவிக்கும் 2 கிராமங்கள்; சூறாவளி காற்றில் சாய்ந்த மின்கம்பங்கள் சீரமைக்கப்படுமா? + "||" + Hurricane Leaning electric poles in the air

திருப்பரங்குன்றம் அருகே மின்சாரம் இன்றி இருளில் தவிக்கும் 2 கிராமங்கள்; சூறாவளி காற்றில் சாய்ந்த மின்கம்பங்கள் சீரமைக்கப்படுமா?

திருப்பரங்குன்றம் அருகே மின்சாரம் இன்றி இருளில் தவிக்கும் 2 கிராமங்கள்; சூறாவளி காற்றில் சாய்ந்த மின்கம்பங்கள் சீரமைக்கப்படுமா?
திருப்பரங்குன்றம் அருகே சூறாவளி காற்றில் சாய்ந்த 15–க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சீரமைக்கப்படாததால் 2 கிராமங்கள் கடந்த 3 நாட்களாக இருளில் மூழ்கியுள்ளது.

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம் அருகே உள்ள சூரக்குளம், பரம்புபட்டி ஆகிய கிராமங்களில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. சூறாவளி காற்றில் அந்த கிராமங்களில் உள்ள வீடுகளின் ஓடுகள், சிமெண்டு கூரைகள் பறந்தன. மேலும் பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. பரம்புபட்டியில் அதாவது மதுரை விமான நிலையத்தின் சுற்றுச்சுவரின் பின்புறம் மற்றும் வயல் பகுதிகளில் 9 இடங்களில் மின் கம்பங்கள் முற்றிலும் சாய்ந்தன. இதனால் மின்கம்பிகள் அறுந்து தொங்கின. இதேபோல் நிலையூரை அடுத்த சூரக்குளம் செல்லும் சாலையில் பழமையான மரங்கள் சாயந்தன. அங்குள்ள 7 மின் கம்பங்கள் சாய்ந்து, மின்கம்பிகள் அறுந்து சேதமடைந்தன. 2 கிராமங்களிலும் மின்கம்பங்கள் சேதமடைந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மின்சாரம் இன்றி அப்பகுதி மக்கள் 3 நாட்களாக இருளில் மூழ்கி உள்ளனர். விவசாயிகளும் வயல்கள் மற்றும் தோட்டத்திற்கு செல்ல முடியாமல் தவியாய் தவித்து வருகின்றனர்.

பரம்புபட்டி, சூரக்குளம் கிராமங்களை சேர்ந்த மக்கள், போர்க்கால அடிப்படையில் சேதமடைந்த மின் கம்பங்களையும், அறுந்து கிடக்கும் மின்கம்பிகளையும் சீரமைத்து மின்சாரம் சீராக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மின்வாரிய அதிகாரிகளை வலியுறுத்தினர். ஆனால் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

இதுதொடர்பாக கிராம மக்கள் கூறும்போது, சூரக்குளம், பரம்புபட்டியில் வீசிய சூறாவளி காற்றில் மின்கம்பங்கள் சாய்ந்து, மின்கம்பிகள் அறுந்து விழுந்துள்ளன. கடந்த 3 நாட்களாகவே அதனை சரிசெய்ய மின்வாரிய அதிகாரிகள் முன்வரவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் இருளில் மூழ்கியுள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் இந்த வி‌ஷயத்தில் தலையிட்டு மின்கம்பங்களை உடனடியாக சரிசெய்து மின்சாரம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும்பட்சத்தில் போராட்டம் நடத்தப்படும் என்றனர்.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறும்போது, 2 நாள் அரசு விடுமுறை என்பதால் பணி தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் பணி தொடங்கி நடந்து வருகிறது. மின் ஊழியர்கள் பற்றாக்குறையால் பணிகளை விரைந்து முடிப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது என்றார்.