பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் குழந்தைகள் இல்லங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் கலெக்டர் சந்தீப் நந்தூரி உத்தரவு


பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் குழந்தைகள் இல்லங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் கலெக்டர் சந்தீப் நந்தூரி உத்தரவு
x
தினத்தந்தி 13 Jun 2019 3:00 AM IST (Updated: 12 Jun 2019 5:47 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் இல்லங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் இல்லங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

குழந்தைகள் இல்லம் 

தூத்துக்குடி மாவட்டத்தில் இளைஞர் நீதிசட்டம் (பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு) 2015–ன் கீழ் 87 குழந்தைகள் இல்லங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. 2 குழந்தைகள் இல்லங்கள் அரசின் கட்டுப்பாட்டின் கீழும், 1 குழந்தைகள் இல்லம் இந்து சமய அறநிலையத்துறையின் கீழும் இயங்கி வருகின்றன. 9 குழந்தைகள் இல்லங்கள் சமூக பாதுகாப்புத்துறையின் மானியம் பெற்றும், 62 குழந்தைகள் இல்லங்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் இயங்கி வருகின்றன. 13 குழந்தைகள் இல்லங்கள் 2018–2019 கல்வியாண்டில் இயங்கவில்லை.

கண்காணிப்பு கேமரா 

தூத்துக்குடியில் தற்போது இயங்கி வரும் 74 குழந்தைகள் இல்லங்களிலும், ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்ட வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டு உள்ள குறைந்தபட்ச தரங்கள் பின்பற்றப்பட வேண்டும். குழந்தைகள் இல்லங்களில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் குடிநீர் உடனடியாக பகுப்பாய்வு செய்யப்பட வேண்டும். பெண் குழந்தைகள் மட்டும் தங்கி பயிலும் குழந்தைகள் இல்லங்களில் நிர்வாகி மற்றும் பணியாளர்கள் பெண் பணியாளராக இருத்தல் வேண்டும். ஒரு வார காலத்திற்குள் குழந்தைகள் இல்லங்களில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் போலீசாரின் தடையில்லா சான்று பெறப்பட வேண்டும். குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அனைத்து குழந்தைகள் இல்லங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story