புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக தேசிய பேரிடர் மீட்பு படையினர் 180 பேர் குஜராத் விரைவு


புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக தேசிய பேரிடர் மீட்பு படையினர் 180 பேர் குஜராத் விரைவு
x
தினத்தந்தி 13 Jun 2019 5:00 AM IST (Updated: 12 Jun 2019 11:02 PM IST)
t-max-icont-min-icon

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக அரக்கோணத்திலிருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் 180 பேர் குஜராத் விரைந்துள்ளனர்.

அரக்கோணம்,

தென்மேற்கு பருவமழை தொடங்கியதையடுத்து கேரளா, குஜராத், மராட்டிய மாநிலங்களில் மழை தீவிரமாகியுள்ளது. இந்த நிலையில் அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தாழ்வு மண்டலமாக மாறி புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு வாயு என பெயரிடப்பட்டு உள்ளது.

இந்த புயல் தீவிரமடைந்து குஜராத்தில் இன்று (வியாழக்கிழமை) கரையை கடக்கும் என வானிைல ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. புயல் பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்பு பணிகளுக்காக இந்தியாவில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு படை மையத்தில் இருந்து வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டு மீட்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

இந்த நிலையில் குஜராத்தில் புயல் கரையை கடக்கும் போது மீட்பு பணிக்காக தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்களை அனுப்பி வைக்க அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை மையத்திற்கு மத்திய தேசிய பேரிடர் மீட்பு படை மையத்தில் இருந்து உத்தரவு வந்தது. இதை தொடர்ந்து நேற்று உதவி கமாண்டன்ட் ராஜன்பாலு தலைமையில் தலா 30 வீரர்கள் வீதம் 6 குழுக்களாக மொத்தம் 180 வீரர்கள் அரக்கோணம் ஐ.என்.எஸ்.ராஜாளி கடற்படை விமானதளத்தில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு சென்றனர்.

புயல் பாதிப்பு ஏற்படும் பகுதியில் சாலையில் விழுந்து கிடக்கும் மரங்கள், மின்கம்பங்களை அப்புறப்படுத்த நவீன கருவிகள், கட்டிட இடிபாடிகளில் சிக்கியவர்களை மீட்டு அவர்களுக்கு முதலுதவி அளிப்பதற்காக முதலுதவி உபகரணங்கள், ரப்பர் படகுகள், உயிர் காக்கும் ஆக்சிஜன் சிலிண்டர்கள், இடிந்து கிடக்கும் கட்டிடங்களை எளிதில் உடைத்தெடுக்கும் நவீன கருவிகளுடன் இவர்கள் புயல் பாதித்த பகுதியில் மீட்பு பணியில் ஈடுபடுத்தபடுவார்கள். மறு உத்தரவு வரும் வரை வீரர்கள் அங்கு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று தேசிய பேரிடர் மீட்பு படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story