அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கு பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களுக்கு பயிற்சி


அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கு பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களுக்கு பயிற்சி
x
தினத்தந்தி 13 Jun 2019 4:45 AM IST (Updated: 13 Jun 2019 12:16 AM IST)
t-max-icont-min-icon

அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கு பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தொடங்கி வைத்தார்.

கிரு‌‌ஷ்ணகிரி, 

அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையினை அதிகரிக்கும் நோக்கத்திற்காக தமிழகத்தில் முன்பருவ கல்வி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டத்தில் 2019-20-ம் கல்வியாண்டில் 74 பள்ளிகளில் முன்பருவ கல்வியான எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்பட்டு, அப்பள்ளியில் பணிபுரிய இடைநிலை ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அவ்வாறு பணியமர்த்தப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு மாண்டிசோரி கல்வி முறையில் எவ்வாறு கற்றல் நிகழ்வுகள் அமைக்கப்பட வேண்டும் என்பதற்கு 3 நாள் பயிற்சி வழங்கப்படுகிறது.

இந்த பயிற்சியானது கிரு‌‌ஷ்ணகிரி ஒருங்கிணைந்த கல்வி மாவட்ட திட்ட அலுவலகத்தில் நேற்று தொடங்கியது. பயிற்சியினை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், குழந்தை உளவியல், முன்பருவ பாடத்திட்டங்கள், அதனை அணுகும் முறை, செயல்படுத்தும் முறை, குறிப்பாக பாடல், கதை, படங்கள், கேலிச்சித்திரங்கள், பாத்திரம் ஏற்று நடித்தல், மொழி விளையாட்டுகள், கணினி வழி கற்றல், இணையதள வழி கற்றல், வழிகாட்டுதல்கள், ஆலோசனைகள், கலந்தாய்வுகள், மாதிரி வகுப்புகள் போன்ற பல்வேறு அம்சங்களுடன் இந்த பயிற்சி வழங்கப்படும்.

இதன் மூலம் மாணவர்கள் முன்பருவ கல்வி வகுப்பறையில் ஆர்வமுடனும், பயமின்றியும், விருப்பமுடனும், தானாகவும் கற்றல் நிகழ்வில் ஈடுபட வேண்டும் என்பதே இந்த பயிற்சியின் முக்கிய நோக்கம் ஆகும் என்றார். மாவட்ட உதவி திட்ட அலுவலர் நாராயணன் பயிற்சி குறித்து பேசினார். பயிற்சியின் கருத்தாளர்களாக ஜெகதேவி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியை திருநிறைச்செல்வி, சவுளூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியை உ‌ஷா ஆகியோர் செயல்பட்டனர்.

இந்த பயிற்சிக்கான ஏற்பாடுகளை அங்கன்வாடி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் மற்றும் மாவட்ட பயிற்சி ஒருங்கிணைப்பாளர் காவேரி ஆகியோர் செய்துள்ளனர்.

Next Story