கஞ்சா வைத்திருந்ததாக கல்லூரி மாணவர் உள்பட 5 பேர் கைது - செஞ்சி போலீசார் அதிரடி நடவடிக்கை
கஞ்சா வைத்திருந்த கல்லூரி மாணவர் உள்பட 5 பேரை செஞ்சி போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
செஞ்சி,
செஞ்சி தேசூர்பாட்டை பகுதியில் உள்ள ஒரு வீட்டின் பின்புறம் சிலர் கஞ்சாவை பொட்டலமாக மடித்து விற்பனை செய்து வருவதாக செஞ்சி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையிலான போலீசார் தேசூர்பாட்டை பகுதியில் உள்ள அந்த வீட்டை அதிரடியாக சுற்றி வளைத்தனர். அப்போது அங்கு கஞ்சாவை பொட்டலமாக மடித்துக் கொண்டிருந்த 5 பேர் கொண்ட கும்பல் போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றது. இதனால் உஷாரான போலீசார் தப்பி ஓடியவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர்கள் செஞ்சி தேசூர்பாட்டை கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த பழனி மகன்கள் சக்திவேல்(வயது 19), மணி(21), பழனி மனைவி பழனியம்மாள்(40), முருகன் மகன் சூரியா(19), ராஜேந்திரன் மகன் செந்தில்குமார்(23) ஆகியோர் என்பதும், கஞ்சாவை வாங்கி வந்து பொட்டலாக மடித்து விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து 5 பேரையும் போலீசார் கைது செய்ததோடு, அவர்களிடம் இருந்த ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கைதான சூரியா திருவண்ணாமலையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. 3-ம் ஆண்டு படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர்கள் கஞ்சாவை எங்கு வாங்கி வந்தார்கள் என்றும், கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக கஞ்சா பொட்டலமாக மடிக்கப்பட்டதா? என்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story