மனைவி சேர்ந்து வாழ மறுத்ததால் போலீஸ் நிலையத்தில் மகனுடன் விஷம் குடித்த வியாபாரி
நிலக்கோட்டை மகளிர் போலீஸ் நிலையத்தில், மனைவி சேர்ந்து வாழ மறுத்ததால் மகனுடன் வியாபாரி விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நிலக்கோட்டை,
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை கே.குரும்பபட்டியை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 45). இவர் நிலக்கோட்டையில் உரக்கடை வைத்து உள்ளார். இவரது மனைவி முருகேஸ்வரி (39). இவர்களுக்கு அபினேஷ் (17) என்ற மகனும், அஜிதா (16) என்ற மகளும் உள்ளனர்.
இந்தநிலையில் கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதுதொடர்பாக முருகேஸ்வரி நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் விசாரணை நடத்துவதற்காக பாண்டியனையும், முருகேஸ்வரியையும் போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்தனர்.
இதற்காக நேற்று அவர்கள் 2 பேரும் போலீஸ் நிலையத்துக்கு சென்றனர். மேலும் அவர்களுடைய மகன் அபினேசும் சென்றார். போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா, 2 பேரிடமும் விசாரணை நடத்தினார். அப்போது முருகேஸ்வரி, பாண்டியனுடன் சேர்ந்து வாழ மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த பாண்டியன் உடனடியாக தனது மகனை போலீஸ் நிலையத்துக்கு வெளியே அழைத்து வந்தார். பின்னர் ஏற்கனவே தான் தயாராக வைத்திருந்த பூச்சி மருந்தை (விஷம்) மகனின் வாயில் ஊற்றினார். பின்னர் அவரும் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் அவர்கள் மேல்சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் நிலையத்தில் மகனுடன் வியாபாரி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story