அடியாட்களை வைத்து விவசாயிகளின் டிராக்டர்களை பறிமுதல் செய்யும் வங்கி அதிகாரிகள் கலெக்டர் அலுவலகத்தில் புகார்


அடியாட்களை வைத்து விவசாயிகளின் டிராக்டர்களை பறிமுதல் செய்யும் வங்கி அதிகாரிகள் கலெக்டர் அலுவலகத்தில் புகார்
x
தினத்தந்தி 13 Jun 2019 4:15 AM IST (Updated: 13 Jun 2019 12:31 AM IST)
t-max-icont-min-icon

அடியாட்களை வைத்து விவசாயிகளின் டிராக்டர்களை வங்கி அதிகாரிகள் பறிமுதல் செய்வதாக கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

கிரு‌‌ஷ்ணகிரி, 

தமிழக விவசாய டிராக்டர் உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் மாநில தலைவர் மகாராஜன் தலைமையில் விவசாயிகள் கிரு‌‌ஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:- கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களுடைய நிலங்களை அடமானம் வைத்து வங்கியில் ரூ. 5 லட்சம், 6 லட்சம் என கடன் பெற்று விவசாயம் செய்வதற்காக டிராக்டர்களை வாங்கியுள்ளனர். தற்போது வறட்சியின் காரணமாக விவசாயிகள் எந்தவித வருமானமும் இன்றி வெளி மாநிலங்களுக்கு சென்று கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் வங்கி அதிகாரிகள் அடியாட்களை வைத்து விவசாயிகளின் டிராக்டர்களை பறிமுதல் செய்து வருகின்றனர். நீதிமன்றம் விவசாயிகளின் துயரத்தையும், தற்கொலை செய்து கொள்வதையும் கருத்தில் கொண்டு விவசாயிகளின் கடன்களுக்காக விளை நிலங்களை மார்க்கெட்டிங் செய்யக்கூடாது.

விவசாயிகளின் புகைப்படங்களை பொது இடங்களில் விளம்பரம் செய்யக்கூடாது என்று கூறியிருந்தது. ஆனால் இந்த உத்தரவையும் மீறி வங்கி அதிகாரிகள் அடியாட்களை வைத்து விவசாயிகளை தகாத வார்த்தைகளால் பேசி, மன உளைச்சலை ஏற்படுத்தி விவசாயிகள் தற்கொலைக்கு செல்லும் அவல நிலையை உருவாக்கி வருகின்றனர்.

எனவே விவசாயிகளின் டிராக்டர்களை கலெக்டர் முன்னிலையில் வங்கி அதிகாரிகளிடம் ஒப்படைக்க ஒப்புதல் அளிக்கிறோம். விவசாயிகளின் நலன் காக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story