கிரு‌‌ஷ்ணகிரி அருகே ரூ.78½ லட்சம் மோசடி; 3 பேர் கைது


கிரு‌‌ஷ்ணகிரி அருகே ரூ.78½ லட்சம் மோசடி; 3 பேர் கைது
x
தினத்தந்தி 12 Jun 2019 11:15 PM GMT (Updated: 12 Jun 2019 7:04 PM GMT)

கிரு‌‌ஷ்ணகிரி அருகே ரூ.78½ லட்சம் மோசடி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கிரு‌‌ஷ்ணகிரி, 

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள குருபரத்தஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரா (வயது 54). இவர் பெங்களூருவில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் தங்கியிருந்த வீட்டின் அருகே வசிப்பவர் ரத்தினம். இவரது மகன் ரிச்சர்டு (28). ரிச்சர்டு தான் லண்டனில் தனியார் நிறுவனத்தில் உயர் பொறுப்பில் அதிக சம்பளத்தில் வேலை செய்து வருவதாகவும், தனது சம்பளம் தொகை முழுவதும் வங்கியில் செலுத்தப்பட்டு வருவதாகவும், தனது வங்கி கணக்கில் ரூ.5 கோடிக்கு மேல் உள்ளதால் வரி மற்றும் பாதுகாப்பு தொகை கட்ட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதற்காக ரிச்சர்டின் பெற்றோர், ராமச்சந்திராவிடம் உதவி கேட்டதாக கூறப்படுகிறது. இதனை நம்பிய அவர் கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து ரூ.78 லட்சத்து 60 ஆயிரத்தை ரிச்சர்ட்டின் பெற்றோரிடம் கொடுத்து வந்ததாக தெரிகிறது. இந்தநிலையில் தான் கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு ரிச்சர்டின் தந்தை ரத்தினம், தாய் அமலி ஆகியோரிடம் ராமச்சந்திரா கேட்டுள்ளார்.

ஆனால் அவர்கள் பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ராமச்சந்திரா கிரு‌‌ஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், ரிச்சர்டு வெளிநாடு செல்லாமல் உள்ளூரில் இருந்து கொண்டே வெளிநாட்டில் வேலை செய்வதாக கூறி மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதையடுத்து மோசடியில் ஈடுபட்டதாக ரிச்சர்டு, ரத்தினம், அமலி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Next Story