நாமகிரிப்பேட்டை அருகே கார் மோதி பள்ளி மாணவி சாவு பொதுமக்கள் சாலை மறியல்
நாமகிரிப்பேட்டை அருகே கார் மோதியதில் பள்ளி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ராசிபுரம்,
ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை அருகே உள்ள தண்ணீர்பந்தல்காடு பகுதியை சேர்ந்தவர் வரதராஜன். கூலி தொழிலாளி. இவருடைய மகள் காயத்ரி (வயது 12). இவள் கும்பக்கொட்டாய் அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இந்தநிலையில் நேற்று காலையில் வழக்கம்போல் பள்ளிக்கூடம் செல்வதற்காக காயத்ரி ராசிபுரம்-ஆத்தூர் சாலையில் தண்ணீர்பந்தல்காடு பகுதி அருகே நடந்து சென்றாள்.
அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று மாணவி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்து காயத்ரி உயிருக்கு போராடினாள். இதையடுத்து மாணவி சிகிச்சைக்காக அந்த பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டாள். அங்கு மாணவிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மாணவி மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டாள். அங்கு மாணவி காயத்ரியை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதையறிந்து மாணவியின் பெற்றோர், உறவினர்கள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் ஆகியோர் சம்பவம் நடந்்த இடத்தில் திரண்டனர். இதைத்தொடர்ந்து காயத்ரி மீது மோதிய கார் டிரைவரை கைது செய்ய கோரி ராசிபுரம்-ஆத்தூர் சாலையில் அவர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சாலையின் இரண்டு பக்கமும் நீண்ட தூரம் வாகனங்கள் அணி வகுத்து நின்றன.
இதுகுறித்து தகவலறிந்த ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயராகவன், நாமகிரிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோ, வருவாய்த்துறையினர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதைத்தொடர்ந்து அவர்களிடம் பொதுமக்கள் கூறுகையில், மாணவி விபத்துக்கு காரணமான கார் டிரைவரை கைது செய்ய வேண்டும். மேலும் தண்ணீர்பந்தல்காடு பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. எனவே அந்த பகுதியில் வேகத்தடை அமைத்து விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதைக்கேட்ட அதிகாரிகள், உங்கள் கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர்.
இந்த விபத்து தொடர்பாக நாமகிரிபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
பின்னர் விபத்து தொடர்பாக நாமக்கல் பொன்நகரை சேர்ந்த கார் டிரைவர் ரமேஷ் (55) என்பவரை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story