மாவட்ட செய்திகள்

மண்டபம்– பாம்பன் இடையே பூமிக்கடியில் மின்சார கேபிள் பதிக்கும் பணி தொடங்கியது + "||" + Mandapam - Pamban Between Electric cable is the work of the under earth

மண்டபம்– பாம்பன் இடையே பூமிக்கடியில் மின்சார கேபிள் பதிக்கும் பணி தொடங்கியது

மண்டபம்– பாம்பன் இடையே பூமிக்கடியில் மின்சார கேபிள் பதிக்கும் பணி தொடங்கியது
அடிக்கடி ஏற்படும் மின் வெட்டை தடுக்கும் பொருட்டு ரூ.65 லட்சம் நிதியில் மண்டபம்–பாம்பன் இடையே பூமிக்கடியில் கேபிள் பதிக்கும் பணி தொடங்கியது.

ராமேசுவரம்,

வழுதூரில் உள்ள அரசு மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து கம்பி மூலம் மண்டபம் முகாமில் செயல்படும் துணை மின் நிலையத்திற்கு மின்சாரம் கொண்டு வரப்படுகிறது. அங்கிருந்து மின்கம்பம் மூலமாக பாம்பன் ரோடு பாலம் வரையிலும் பாலத்தின் நடைபாதையில் கேபிள் பதிக்கப்பட்டும் பாம்பன் தங்கச்சிமடம் மற்றும் ராமேசுவரம் பகுதிக்கு மின்சாரம் கொண்டு வரப்படுகிறது.

இந்த நிலையில் மண்டபம் முதல் பாம்பன் வரையிலும் கடல் மற்றும் கடற்கரை பகுதியாக இருப்பதால் காற்றின் வேகம், உப்புக்காற்றின் படிவத்தாலும் பாதிப்பு ஏற்படுகிறது. மின்கம்பிகள் அடிக்கடி அறுந்து விழுவதாலும், சேதமாவதாலும் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது.

ராமேசுவரம் தீவு பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின் வெட்டை தடுக்கும் பொருட்டும், மின்சார கம்பிகள் சேதமாவதை தடுக்கும் வகையிலும் மண்டபம்–பாம்பன் இடையே பூமிக்கடியில் கேபிள் பதித்து அதன் மூலம் மின்சாரம் கொண்டு வர மின்சார வாரியம் முடிவு செய்தது. அதற்காக தமிழக அரசு ரூ.65 லட்சம் நிதியையும் ஒதுக்கியது.

இதைத்தொடர்ந்து பூமிக்கடியில் மின்சார கேபிள் பதிக்கும் பணி நேற்று தொடங்கியது. அதற்காக பாம்பன் ரோடு பாலத்தை ஒட்டியுள்ள கடற்கரை பகுதிகளில் இருந்து மண்டபம் இடைப்பட்ட கடற்கரை பகுதிகளில் 2 ஜே.சி.பி. எந்திரம் மூலம் சுமார் 3 அடி ஆழத்தில் குழி தோண்டுவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் கடற்கரை பூங்கா பகுதியில் இறக்கி வைக்கப்பட்டுள்ள பெரிய ரோல்கள்அடங்கிய மின்சார கேபிள்கள் கிரேன் மூலம் கடற்கரை பகுதிக்கு தூக்கி வரப்பட்டு தோண்டப்பட்ட குழிகளில் கேபிள்களை பதிக்கும் பணியில் 10–க்கும் மேற்பட்ட தொழுலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இது பற்றி மின்வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:–

மண்டபம்–பாம்பன் இடையே 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு பூமிக்கடியில் மின்சார கேபிள் பதிக்கும் பணி இன்னும் 2 மாதத்தில் முழுமையாக முடிவடையும். இந்த பணிகள் முடியும் பட்சத்தில் பலத்த காற்றாலும் மற்றும் உப்புக்காற்றின் படிவத்தாலும் மின்சார கேபிள்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் வராது என்பதுடன் அடிக்கடி மின்வெட்டும் இருக்காது. மாவட்டத்திலேயே முதல் இடமாக மண்டபம்–பாம்பன் இடையே தான் பூமிக்கடியில் மின்சார கேபிள் பதிக்கும் திட்டம் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த கட்டமாக மாவட்டம் முழுவதும் உள்ள பகுதிகளில் இந்த திட்டம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.