‘‘இறுதிச்சடங்கு செய்ய எனது கடைசி மகளுக்கே உரிமை உண்டு’’ 92 வயது முதியவர், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு


‘‘இறுதிச்சடங்கு செய்ய எனது கடைசி மகளுக்கே உரிமை உண்டு’’ 92 வயது முதியவர், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு
x
தினத்தந்தி 12 Jun 2019 11:30 PM GMT (Updated: 12 Jun 2019 8:31 PM GMT)

எனது இறுதி சடங்கினை செய்வதற்கு கடைசி மகளுக்கே உரிமை உண்டு என்றும், தன்னை கவனிக்காத மகனுக்கு எந்த உரிமையும் இல்லை என்று கூறி 92 வயது முதியவர் ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்லமுத்து (வயது 92). வயது முதிர்வின் காரணமாக இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு உள்ளார். அவர் படுத்த படுக்கையாக வேனில் வைத்து, ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு செல்லமுத்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:–

எனது மனைவி நாயகம் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். எனக்கு கங்காதேவி, கீதா என்ற 2 மகள்களும், அன்பழகன் என்ற மகனும் உள்ளனர். இதில் அன்பழகன், கங்காதேவி ஆகியோர் திருமணமாகியவுடன் தனியாக சென்றுவிட்டனர். எனது சொத்துகளை 30 ஆண்டுகளுக்கு முன்னரே பிரித்து எழுதி வைத்து விட்டேன். உடல்நிலை பாதிக்கப்பட்ட என்னையும், எனது மனைவியையும் கடைசி மகள் கீதா தான் கவனித்து வந்தார். எனது மனைவி இறந்ததும் மகன் அன்பழகன் மூத்த மகன் என்ற உரிமையில் எனது மனைவியின் உடலை பெற்றுச் சென்று இறுதி சடங்கு செய்தார்.

எந்த உதவியும் செய்யாமல் பெற்றோரை கவனிக்காமல் இருந்தவர் கடைசியில் உரிமை கொண்டாடி எனது மனைவியின் உடலை பெற்றுச் சென்றுவிட்டார். இதேபோல, என்னையும் இதுநாள் வரை எனது கடைசி மகள் கீதா தான் கவனித்து வருகிறார். எனவே எனது இறுதிச்சடங்குகள் அனைத்தையும் எனது மகள் கீதாவும், அவரின் குடும்பத்தினர் மட்டுமே செய்ய வேண்டும் என்று உயில் எழுதி வைத்துள்ளேன். இதனை மீறி நான் இறந்ததும் எனது மகன் உரிமை கொண்டாடி எனது உடலை பெற வந்து தகராறு செய்தால் போலீசார் தலையிட்டு எனது விருப்பத்தின் பேரில் மகள் கீதாவின் மூலமே இறுதிச்சடங்குகளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.


Next Story