குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் கலெக்டர் தொடங்கி வைத்தார்


குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 13 Jun 2019 4:15 AM IST (Updated: 13 Jun 2019 2:23 AM IST)
t-max-icont-min-icon

குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை கலெக்டர் சிவராசு தொடங்கி வைத்தார்.

திருச்சி,

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ந்தேதி குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி பொதுமக்களிடையே பல்வேறு வடிவங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி திருச்சி ஜங்ஷன் அருகில் நேற்று தேசிய குழந்தை தொழிலாளர் சீரமைப்புத்திட்டம், தொழிலாளர் நலத்துறை ஆகிய துறைகள் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தொடங்கி வைத்தார்.

அப்போது குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் சிவராசு பேசும்போது கூறியதாவது:-

அடிப்படை உரிமை

கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை. 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை வேலைக்கு பெற்றோர்கள் அனுப்பக்கூடாது. குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி கல்வி கற்பதை ஊக்குவிக்க வேண்டும் என இந்திய அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது.

நமது மாவட்டத்தை குழந்தை தொழிலாளர் இல்லாத மாவட்டமாக உருவாக்கிட வேண்டும். கல்வி கற்றால்தான் உயர்ந்த நிலைக்கு வரமுடியும் என்பதை உணர்ந்து பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும்.

அபராதம்- தண்டனை

14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை எவ்வித பணியிலும் ஈடுபடுத்துவதும், 15 முதல் 18 வயதிற்குட்பட்ட வளர் இளம் பருவத்தினரை அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளது.

இச்சட்ட விதிகளை மீறுவோருக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதமும், அல்லது ஆறு மாதம் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு மேற்படாமல் சிறை தண்டனை விதிக்கப்படும். கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் அனைவரும் கட்டாயம் கல்வி கற்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சிவருத்ரய்யா, தொழிலாளர் இணை ஆணையர் தர்மசீலன், திருச்சி மேற்கு தாசில்தார் ராஜவேல், தேர்தல் பிரிவு தனி தாசில்தார் முத்துசாமி, தொழிலாளர் உதவி ஆணையர் சதீஸ் குமார் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story