மராட்டியத்தை மிரட்டிய ‘வாயு’ புயல் : பால்கரில் பெரும் விபத்து தவிர்ப்பு
வாயு புயல் மராட்டியத்தை மிரட்டி சென்றது. பால்கர் மாவட்டத்தில் ரெயில்வே பாலத்தில் இருந்த கான்கிரீட் சாரம் சரிந்தது. அந்த நேரம் ரெயில்கள் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
மும்பை,
வாயு புயல் காரணமாக நேற்று மராட்டிய கடற்கரையோர பகுதிகளான ரத்னகிரி, அலிபாக், முருட் கடற்கரை, கொங்கன் பகுதியில் கடல் அலை சீற்றம் காரணமாக மீனவர்கள் தங்கள் படகை பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர். மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தினர்.
பால்கர் மாவட்டத்தில் தகானு, வசாய், விரார் அர்னாலா, கேல்வே கடற்கரையில் காற்று பலமாக வீசியதால் பொதுமக்கள் அங்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் மின்கம்பங்கள் பழுதானதால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் இருளில் மூழ்கி அவதி அடைந்தனர்.
பால்கர் மாவட்டம் கோல்வாட்-உமர்காவ் ரெயில் நிலையங்களுக்கிடையே மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.சூறைக்காற்று வீசியதால்மேம்பாலத்தில் போடப்பட்டு இருந்த கான்கிரீட் சாரம் தண்டவாளம் அருகே சரிந்து தொங்கியது. அப்போது தண்டவாளத்தில் எந்தவொரு ரெயிலும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இதன் காரணமாக அந்த வழியாக வந்த மும்பை சூரத் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன. பின்னர் ராட்சத கிரேன் வரவழைக்கப்பட்டு சரிந்து விழுந்த கான்கிரீட் சாரத்தை தூக்கி நிறுத்தும் பணி நடந்தது. இதன்பின்னர் ரெயில் அங்கிருந்து தாமதமாக புறப்பட்டு சென்றது.
மராட்டியத்தை மிரட்டிய வாயு புயல் நேற்று மாலை 5.30 மணி அளவில் குஜராத் நோக்கி சென்றதால் கொங்கன் மற்றும் மும்பை, பால்கர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழையும், சில இடங்களில் லேசான மழை பெய்தது.
Related Tags :
Next Story