‘வாயு’ புயல் தாக்கம் எதிரொலி : மும்பையில் 75 மரங்கள் சாய்ந்தன


‘வாயு’ புயல் தாக்கம் எதிரொலி : மும்பையில் 75 மரங்கள் சாய்ந்தன
x
தினத்தந்தி 13 Jun 2019 5:30 AM IST (Updated: 13 Jun 2019 2:55 AM IST)
t-max-icont-min-icon

‘வாயு’ புயல் தாக்கம் காரணமாக மும்பையில் வீசிய சூறைக்காற்றில் 75 மரங்கள் சாய்ந்தன. ஒர்லியில் கடல் சீற்றம் காரணமாக குடிசை வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்தது.

மும்பை,

அரபிக்கடலில் உருவான ‘வாயு’ புயல் காரணமாக மும்பையில் கடல் நேற்று சீற்றத்துடன் காணப்பட்டது. மும்பை ஒர்லி மதராஸ்வாடி பகுதியில் கடல் அலை ஆக்ரோஷமாக கரையை தாக்கி வெளியேறியது. இதில் அங்குள்ள பல குடிசை வீடுகளில் தண்ணீர் புகுந்தது. பாத்திரங்கள் மூலம் கடல் நீரை கோரி வெளியே ஊற்றினார்கள்.

இதனால் மதராஸ்வாடி குடிசைவாசிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளானார்கள். மேலும் மெரின்லைன் கடற்கரையில் கடல் சீற்றம் காரணமாக சாலையில் தண்ணீரை வீசி அடித்தது. இதனால் பொதுமக்கள் அங்கு பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டது. கேட்வே ஆப் இந்தியா பகுதியில் கடல் அலைகள் கரையை தாக்கியது. இத னால் அங்கு பொதுமக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

இதே போல வெர்சோவா, ஜூகு, மலாடு அக்சா கடற்கரையில் கடல் அலை ஆக்ரோஷமாக காணப்பட்டதால் பொதுமக்கள் யாரும் கடலில் இறங்கி குளிக்க வேண்டாம் என போலீசார் எச்சரித்தனர்.

வெர்சோவா, மனோரி, கோராய், உரண் மோரா, அலிபாக் ஆகிய இடங்களில் படகு போக்குவரத்துக்கு மாநில கடல்சார் வாரியம் தடை விதித்தது. இதையடுத்து நேற்றுமுன்தினம் மாலை முதலே படகு சேவைகள் இயக்கப்படவில்லை.

இதன் காரணமாக 40 ஆயிரம் சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

மும்பையில் பலத்த சூறை காற்றுடன் வீசியதில் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 75 மரங்கள் சாய்ந்தன. அந்தந்த இடங்களில் தீயணைப்பு படையினர் மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

மும்பை கொலபாவில் 13 மி.மீ. மழையும், சாந்தாகுருசில் 7 மி.மீ. மழையும் பதிவானது.

மும்பையில் 400 விமான சேவைகள் பாதிப்பு

குஜராத்தில் வாயு புயல் இன்று காலை கரையை கடக்க இருக்கும் நிலையில், மும்பையில் நேற்று அதன் தாக்கம் கடுமையாக இருந்தது. மும்பை வான் பகுதியில் வானிலை மோசமாக காணப்பட்டது. இதனால் மும்பையில் சுமார் 400 விமான சேவைகள் பாதிக்கப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

மும்பை விமான நிலையங்களில் தினமும் 900 விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் 400 விமான சேவை கள் பாதிக்கப்பட்டதால் பயணிகள் பரிதவிக்க வேண்டிய தாயிற்று.

Next Story