முத்தூர் அருகே தேங்காய் நார் மில்லில் தீ விபத்து


முத்தூர் அருகே தேங்காய் நார் மில்லில் தீ விபத்து
x
தினத்தந்தி 13 Jun 2019 4:00 AM IST (Updated: 13 Jun 2019 3:59 AM IST)
t-max-icont-min-icon

முத்தூர் அருகே தேங்காய் நார் மில்லில் தீவிபத்து ஏற்பட்டது.

முத்தூர் ,

திருப்பூர் மாவட்டம் முத்தூர் அருகே உள்ள புதுப்பாளையத்தை சேர்ந்த பி.பூச்சாமி (வயது 54). இவருக்கு முத்தூர் அருகே உள்ள தொட்டியபாளையம் நொய்யல் தோட்டத்தில் தேங்காய் நார் கழிவு மஞ்சி மில் உள்ளது. இவர் முத்தூர் அருகே உள்ள நொய்யல் தோட்டத்தில் தேங்காய் நார் மில் வைத்துள்ளார். இந்த நார்மில்லின் கலத்தில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் தேங்காய் நார் கழிவு மஞ்சி கொட்டப்பட்டு காயவைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நேற்று மதியம் 3.30 மணி அளவில் வெயிலில் காய வைக்கப்பட்டிருந்த தேங்காய் நார் கழிவு மஞ்சியின் ஒரு பகுதியில் திடீரென்று எதிர்பாராதவிதமாக தீ பிடித்து எரிய தொடங்கியது.

இது பற்றி தகவல் அறிந்த நார்மில் ஊழியர்கள் உடனடியாக விரைந்து வந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயற்சி செய்தனர். இருப்பினும் அவர்களால் முற்றிலும் தீயை அணைக்க முடியவில்லை. சுட்டெரிக்கும் கோடை வெயில் தாக்கம் காரணமாக தேங்காய் நார் கழிவு மஞ்சி முழுவதும் தீ மளமளவென்று பரவி எரிய தொடங்கியது.

இதுபற்றி தகவல் அறிந்த வெள்ளகோவில் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் சி.தனசேகரன், வேலுச்சாமி (போக்குவரத்து) தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமார் 2 மணி நேரம் போராடி தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்து தீ மேலும் பரவாமல் தடுத்து நிறுத்தினர். இருப்பினும் இந்த தீ விபத்தில் சுமார் 1 ஏக்கர் பரப்பளவில் கொட்டி வைக்கப்பட்டிருந்த தேங்காய் நார் கழிவு மஞ்சிகள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின.

இதனை தொடர்ந்து மாவட்ட தீயணைப்பு உதவி அலுவலர் வெங்கட்ரமணன் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்தார். மேலும் இந்த தீ விபத்தில் எரிந்து நாசமான தேங்காய் நார் கழிவு மஞ்சியின் சேத மதிப்பீடு கணக்கீடு செய்யப்பட்டு வருகிறது. மேலும் தீ விபத்துக்கான காரணம் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Next Story