திருப்பூரில் செயல்படாத ஏ.டி.எம். எந்திரங்களால் தொழில்துறையினர் அவதி
திருப்பூரில் செயல்படாத ஏ.டி.எம். எந்திரங்களால் தொழில்துறையினர் அவதியடைந்து வருகிறார்கள்.
திருப்பூர்,
திருப்பூரில் பனியன் தொழில் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இதனால் இந்த தொழிலை தேர்ந்தெடுத்து பலரும் செய்து வந்து கொண்டிருக்கிறார்கள். திருப்பூருக்கு தினமும் வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்கள் என பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் மற்றும் வர்த்தகர்கள் பலர் வந்து கொண்டிருக்கிறார்கள்.
அவர்களும் தங்களுக்கு தேவையான ஆடைகளை வாங்கி செல்கிறார்கள். மேலும், பலர் ஆர்டர்களும் கொடுத்து செல்கிறார்கள். இதனால் மற்ற மாவட்டங்களை விட திருப்பூரில் பணப்புழக்கம் அதிகமாக இருந்து வந்து கொண்டிருக்கிறது. இங்குள்ள பின்னலாடை நிறுவனங்களில் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்.
இந்த தொழிலாளர்களுக்கு வாரந்தோறும் சனிக்கிழமை சம்பள நாள் ஆகும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமாகும். தொழிலாளர்களுக்கு பெரும்பாலான நிறுவனங்கள் வங்கி கணக்குகள் தொடங்கி, அதில் தான் சம்பள பணத்தை செலுத்தி வருகிறார்கள். இதனால் திருப்பூர் மற்றும் புறநகர் பகுதிகள் என பல்வேறு வங்கிகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த வங்கிகளும் தங்களது வங்கி சார்பில் பல்வேறு பகுதிகளில் ஏ.டி.எம். மையங்கள் அமைத்துள்ளன. ஆனால் தற்போது பெரும்பாலான ஏ.டி.எம். எந்திரங்கள் செயல்படாமல் இருப்பதால் தொழில்துறையினர் அவதியடைந்து வருகிறார்கள். இதனால் பணப்புழக்கத்தில் சுணக்கம் ஏற்படும் நிலையும் உள்ளது.
இது குறித்து தொழில்துறையினர் கூறியதாவது:-
பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் மாவட்டங்களில் திருப்பூரும் ஒன்று. பணப்புழக்கம் இல்லாமல் பின்னலாடை தொழில் இல்லை. மூலப்பொருட்கள் வாங்குவது முதல் பின்னலாடைகளை பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பிவைக்க போக்குவரத்து செலவு வரை பணம் தேவை. இதுபோல் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காகவும் தொழில்துறையினர் அவ்வப்போது பணம் தேவைப்படுகிறது. ஆடைகளுக்கான பணத்தையும் வியாபாரிகள் மற்றும் வர்த்தகர்கள் வங்கி கணக்கில் செலுத்துகிறார்கள்.
இதனால் வங்கிகளுக்கு சென்று பணம் எடுக்க நேரமாகும் என்பதால் தொழில்துறையினர் ஏ.டி.எம். எந்திரங்களில் பணத்தை எடுத்து வருகிறார்கள். ஆனால் திருப்பூர் சங்கீதா தியேட்டர் ரோடு, பி.என். ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏ.டி.எம். மையங்களில் எந்திரங்கள் செயல்படாமல் இருந்து வருகிறது. இதன் பணம் எடுக்க முடியாமல் அவதியடைந்து வருகிறோம். வங்கிகளில் கணக்குகளை தொடங்க பல்வேறு அழைப்பு விடுக்கும் வங்கிகள். வாடிக்கையாளர்களின் குறைகளை வங்கி கணக்கு தொடங்கிய பின் கேட்பதில்லை.
வங்கிகளையொட்டி இருக்கும் ஏ.டி.எம். எந்திரங்களில் மட்டுமே பெரும்பாலும் பணம் இருக்கிறது. மற்ற இடங்களில் உள்ள ஏ.டி.எம். மையங்களில் பெரும்பாலும் இருப்பதில்லை. இதுபோல் புறநகர் பகுதிகளில் உள்ள ஏ.டி.எம். மையங்களில் பணமே வைக்கப்படுவதில்லை. இதனால் அவசரத்திற்கு பணம் எடுக்க முடியாமல் அவதியடைந்து வருகிறோம்.
பணம் இல்லாத காரணத்தினால் பல்வேறு வேலைகள் தடைபடுகிறது. எனவே வங்கிகள் தங்களது வங்கி சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஏ.டி.எம். மையங்களை சரியாக பராமரிக்க வேண்டும். தொழில்துறையினரின் பணத்தேவையை கருத்தில் கொண்டு ஏ.டி.எம். மையங்களில் எப்போதும் பணம் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story