வேலூரை குழந்தை நேயமிக்க மாவட்டமாக மாற்றிட வேண்டும் வாழ்த்து மடலை கலெக்டர் வெளியிட்டார்


வேலூரை குழந்தை நேயமிக்க மாவட்டமாக மாற்றிட வேண்டும் வாழ்த்து மடலை கலெக்டர் வெளியிட்டார்
x
தினத்தந்தி 12 Jun 2019 10:00 PM GMT (Updated: 12 Jun 2019 11:05 PM GMT)

உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தையொட்டி, வேலூரை குழந்தை நேயமிக்க மாவட்டமாக மாற்றிட வேண்டும் என்ற வாழ்த்துமடலை கலெக்டர் ராமன் வெளியிட்டார்.

வேலூர், 

உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தையொட்டி வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் தேசிய குழந்தை தொழிலாளர் நல்வாழ்வு இயக்கத்தின் சார்பில் உறுதி மொழி ஏற்கப்பட்டது. கலெக்டர் ராமன் உறுதிமொழியை வாசிக்க அலுவலக ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் திரும்பக்கூறி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

தொடர்ந்து குழந்தை தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்டு 2017-18-ம் கல்வியாண்டில் நடைபெற்ற 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ- மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் விருதுகளை கலெக்டர் வழங்கினார்.

அதேபோன்று மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு மற்றும் தொழிலாளர் நலத்துறை சார்பில் குழந்தை தொழிலாளர் ஒழிப்புமுறை பற்றிய விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தையும் அவர் தொடங்கி வைத்தார். மேலும் கட்டுரை, பேச்சுப்போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளையும், பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார்.

பின்னர் வேலூர் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர் முறைஅகற்றும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் 743 ஊராட்சிகளில் உள்ள பொதுமக்கள், அரசு அலுவலர்கள், பள்ளி மாணவ- மாணவிகள், குழந்தைகள் உரிமை பாதுகாப்புக்குழு உறுப்பினர்கள் ஒன்றிணைந்து வேலூரை குழந்தை நேயமிக்க மாவட்டமாக மாற்றிட வேண்டும் என்ற வாழ்த்து மடலை அவர் வெளியிட்டார்.

பின்னர் அவர் பேசுகையில் 10 வயது முதல் 18 வயதுவரை உள்ள வளர் இளம் குழந்தைகளுக்கு கிடைத்திடு்ம் வண்ணம் ஒரு லட்சம் வாழ்த்து மடல் பிரதிகள் வழங்கப்படுகிறது. கடந்த 2018-19-ம் நிதியாண்டில் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவையென 611 அழைப்புகள் வந்தது.

அதில் 202 குழந்தை திருமணம் குறித்து அழைப்புகள் வந்ததில் 145 குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது என்றார்.

Next Story