பலத்த காற்று வீசியதால் ஊட்டி ரோஜா பூங்காவில் பூக்கள் உதிர்ந்தன - சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
பலத்த காற்று வீசியதால் ஊட்டி ரோஜா பூங்காவில் பூக்கள் உதிர்ந்தன. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.
ஊட்டி,
மலைப்பிரதேசமான ஊட்டி விஜயநகரம் பகுதியில் தோட்டக்கலைத்துறையின் ரோஜா பூங்கா உள்ளது. மலைச்சரிவான பகுதியில் இந்த பூங்கா 4.40 ஹெக்டர் பரப்பளவில் அமைந்து இருக்கிறது. பூங்காவில் 5 அடுக்குகளில் 4 ஆயிரத்து 200 ரகங்களை சேர்ந்த 40 ஆயிரம் ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசனையொட்டி ரோஜா செடிகளில் பல்வேறு வண்ணங்களில் பூக்கள் பூத்து குலுங்கின. இதனை ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
இந்த நிலையில் ஊட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த 3 நாட்களாக தென்மேற்கு பருவமழை பலத்த காற்றுடன் பெய்து வருகிறது. பகல் நேரங்களில் மழை விட்டு, விட்டு பெய்தாலும், இரவில் மழை தொடர்ந்து பெய்கிறது. தொடர் மழை மற்றும் பலத்த காற்று வீசுவதன் காரணமாக ரோஜா பூங்காவில் உள்ள செடிகளில் பூக்கள் தாக்குப்பிடிக்க முடியாமல் உதிர தொடங்கி உள்ளன. பூக்களில் இருக்கும் இதழ்கள் தரையில் விழுந்து ஆங்காங்கே சிதறி கிடப்பதை காண முடிகிறது.
மேலும் சாரல் மழை தொடர்ந்து பெய்வதால் பூக்கள் அழுகி வருகின்றன. கோடை சீசனில் பூத்து குலுங்கி சுற்றுலா பயணிகளை வரவேற்ற ரோஜா மலர்கள் தற்போது உதிர்ந்தும், அழுகியும் காணப்படுகிறது. இதனால் பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் ரோஜா பூக்களை கண்டு ரசிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கிறார்கள். இதையடுத்து பூங்காவில் உயரமாக வளர்ந்து உள்ள ரோஜா செடிகளை கவாத்து செய்யும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு வருவதோடு, அழுகிய பூக்களையும் அகற்றி வருகின்றனர். மேலும் உதிர்ந்த பூக்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
Related Tags :
Next Story