காட்டு யானை வழி மறித்ததால் இறந்தவர் உடலை கொண்டு செல்ல முடியாமல் தவிப்பு
கூடலூர் அருகே காட்டு யானை வழி மறித்து நின்றதால் இறந்தவரின் உடலை எடுத்து செல்ல முடியாமல் நடுவழியில் கிராம மக்கள் காத்து நின்றனர்.
கூடலூர்,
நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா முதுமலை ஊராட்சி நம்பிக்குன்னுவை சேர்ந்தவர் விவசாயி சுப்பிரமணியம் (வயது 82). இவர் நேற்று முன்தினம் காட்டு யானை தாக்கி படுகாயங்களுடன் கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கேரள மாநிலம் கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த நிலையில் சுப்பிர மணியத்தின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு இரவு 8 மணிக்கு கோழிக்கோட்டில் இருந்து முதுமலை ஊராட்சிக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது நம்பிக்குன்னு- முதுகுளி இடையே சுப்பிரமணியத்தை தாக்கிய காட்டு யானை வழிமறித்து நிற்பதாக தகவல் கிடைத்தது. இதனால் புலிகள் காப்பக நுழைவு வாயிலான போஸ்பாரா வனத்துறை சோதனைச்சாவடியில் சுப்பிரமணியம் உடலுடன் முதுமலை ஊராட்சி மக்கள் காத்து நின்றனர்.
அவர்களுடன் மசினகுடி போலீசாரும் நின்றிருந்தனர். அப்பகுதியில் நின்றிருந்த வன ஊழியர்களால் காட்டு யானையை விரட்ட முடிய வில்லை. இதனால் ஊராட்சி மக்கள் வன ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அவர்கள் அங்கிருந்து சென்றனர். இந்த நிலையில் வனத்துறையின் உயரதிகாரிகளை போலீசார் தொடர்பு கொண்டனர்.
இதைத்தொடர்ந்து இரவு 10 மணிக்கு வனத்துறையினர் வந்தனர். பின்னர் நம்பிக்குன்னு கிராமம் அருகே முகாமிட்டு இருந்த காட்டு யானையை விரட்டும் பணி மேற்கொள்ளப்பட்டது. பின்னர் இறந்தவரின் உடலுடன் நடுவழியில் சுமார் 2 மணி நேரம் காத்து நின்ற பொதுமக்கள், போலீசார் நம்பிக்குன்னு கிராமத்துக்கு சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story