ராமநாதபுரம்-தூத்துக்குடி இடையே எரிவாயு குழாய் பதிக்கும் திட்டம், மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்யக்கோரி வழக்கு
ராமநாதபுரம்-தூத்துக்குடி இடையே எரிவாயு குழாய் பதிக்கும் திட்டம் தொடர்பான மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். தூத்துக்குடியைச் சேர்ந்த செல்லம், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது-
மதுரை,
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு ராமநாதபுரத்தில் இருந்து குழாய் மூலம் எரிவாயு வினியோகம் செய்யும் திட்டத்தை இந்தியன் ஆயில் நிறுவனம் செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. இத்திட்டத்தில் ஆறுகள், கால்வாய்கள், சாலைகள், வனம், பாதுகாக்கப்பட்ட சுற்றுச்சூழல் பகுதிகள், சக்கரைக்கோட்டை பறவைகள் சரணாலயம், மன்னார் வளைகுடா பகுதியில் பவளப்பாறைகள் வழியாக தூத்துக்குடிக்கு எரிவாயு குழாய் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக விளை நிலங்களை கையகப்படுத்தும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கு எதிராக மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தோம். அதை விசாரித்த ஐகோர்ட்டு, விவசாய நிலங்களை கையகப்படுத்த இடைக்கால தடை விதித்தது. ராமநாதபுரம்-தூத்துக்குடி இடையே எரிவாயு குழாய் பதிக்க சுற்றுச்சூழல் அனுமதி பெறவில்லை. ஆனால் இதற்கு முன்கூட்டியே சுற்றுச்சூழல் அனுமதி பெற தேவையில்லை என்று மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்தை செயல்படுத்தினால் பறவைகள் சரணாலயம், பவளப்பாறைகளுக்கு பாதிப்பு ஏற்படும். இதனால் சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டியது அவசியம். எனவே ராமநாதபுரம்-தூத்துக்குடி இடையே எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்று மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அதுவரை அந்த உத்தரவை செயல்படுத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. இதுகுறித்து மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Related Tags :
Next Story