திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் வறண்டு கிடக்கும் குளங்கள் தூர்வாரி ஆழப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை


திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் வறண்டு கிடக்கும் குளங்கள் தூர்வாரி ஆழப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 13 Jun 2019 11:00 PM GMT (Updated: 13 Jun 2019 5:48 PM GMT)

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள குளங்கள் தண்ணீரின்றி வறண்டு கிடக்கின்றன. இதனை தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணமாலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் நகரின் மையப்பகுதியில் உள்ள மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் கிரிவலம் செல்வார்கள்.

இதில் கார்த்திகை மாதத்தில் வரும் மகா தீபத்தின் போதும், சித்திரை மாதத்தில் வரும் சித்ரா பவுர்ணமியன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

கிரிவலப்பாதையில் உள்ள மலை மற்றும் வனப்பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. மேலும் கிரிவலப்பாதையில் அஷ்டலிங்கம் கோவில்களின் அருகிலும் குளங்கள் உள்ளன. முன்பு கிரிவலம் செல்லும் பக்தர்கள் இந்த குளங்களில் உள்ள தண்ணீரை புனித நீராக கருதி தலையில் தெளித்து கொண்டு செல்வது வழக்கம்.

இந்த நிலையில் மக்களின் பாதுகாப்பு கருதி கிரிவலப்பாதையில் மக்கள் நடமாடும் பகுதியில் உள்ள குளங்கள் மூடப்பட்டு உள்ளது. இந்த குளங்கள் குடிநீர் ஆதாரமாகவும் இருந்து வருகிறது.

திருவண்ணாமலையில் போதிய மழையின்றி குடிநீர் பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. குடிநீருக்காக மக்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் மழை காலம் தொடங்குவதற்கு முன்பு ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளை ஆழப்படுத்தினால் மட்டுமே குடிநீர் பிரச்சினையில் இருந்து தப்பிக்க முடியும்.

கிரிவலப்பாதையில் குளங்கள் தற்போது வறண்டு காணப்படுகிறது. இந்த குளங்களை தூர்வாரி இன்னும் ஆழப்படுத்தினால் மழை காலங்களில் தண்ணீர் சேமிக்க வழிவகை செய்தால் திருவண்ணாமலை நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

எனவே, கிரிவலப்பாதை மட்டுமின்றி மாவட்டத்தின் அனைத்து ப குதிகளிலும் உள்ள நீர்நிலைகளை மழை காலம் தொடங்குவதற்கு முன்பு தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story