நடிகர் சங்க தேர்தலில் தி.மு.க. தலையீடு உள்ளது ராதாரவி குற்றச்சாட்டு


நடிகர் சங்க தேர்தலில் தி.மு.க. தலையீடு உள்ளது ராதாரவி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 13 Jun 2019 10:45 PM GMT (Updated: 13 Jun 2019 6:44 PM GMT)

நடிகர் சங்க தேர்தலில் தி.மு.க. தலையீடு உள்ளது என்று சேலத்தில் நடிகர் ராதாரவி குற்றம் சாட்டினார்.

சேலம், 

சேலத்தில் உள்ள நாடக நடிகர் சங்க நிர்வாகிகளை சந்தித்து சங்கரதாஸ் சுவாமி அணிக்கு ஆதரவு திரட்டுவதற்காக நடிகர் ராதாரவி சேலம் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தி.மு.க.வில் என்னை சுமையாக நினைத்ததால் அதில் இருந்து வெளியேறினேன். தி.மு.க.வில் தான் இரட்டை தலைமை உள்ளது. படையப்பா படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஒரு காட்சியில் பெண்ணை பற்றி பேசுவார். நடிகை நயன்தாராவை பற்றி நான் இயல்பாக தான் பேசினேன். அ.தி.மு.க. நான் பிறந்த வீடு ஆகும். நான் எப்போதும் அ.தி.மு.க.விற்கு உறுதுணையாக இருப்பேன்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் அரசியல் உள்ளது. குறிப்பாக நடிகர் சங்க தேர்தலில் தி.மு.க.வின் தலையீடு உள்ளது. வி‌ஷால் அணியில் தி.மு.க.வை சேர்ந்த பூச்சிமுருகன் உள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக நடிகர் வி‌ஷால் தலைமையிலான சங்க நிர்வாகம் நாடக நடிகர்களுக்கு எதுவும் செய்யவில்லை. நடிகர் சங்க தேர்தலில் பணத்துக்கு மயங்கி யாரும் வாக்களிக்க கூடாது.

நடிகர் சங்க கட்டிடத்தை காட்டி சிலர் வெற்றி பெறலாம் என்று நினைக்கின்றனர். வி‌ஷால், கார்த்தி ஆகியோர் கடந்த தேர்தலின் போது நாங்கள் திரைப்படத்தில் நடிக்கும் பணத்தை கொண்டு சங்கத்திற்கு நிறைய சலுகைகளை செய்வோம் என்றனர். ஆனால் இதுவரை அவர்கள் அப்படி எதுவும் செய்யவில்லை.

எனவே தான் பாக்யராஜ், ஐசரி கணே‌‌ஷ் ஆகியோர் அணிக்கு ஆதரவு கேட்கிறேன். பாக்யராஜ் தலைமையிலான அணியினர் இந்த தேர்தலில் வெற்றி பெறுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story