விக்கிரபாண்டியத்தில் ஆபத்தான மரப்பாலம் அகற்றப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு


விக்கிரபாண்டியத்தில் ஆபத்தான மரப்பாலம் அகற்றப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 13 Jun 2019 10:45 PM GMT (Updated: 13 Jun 2019 6:51 PM GMT)

விக்கிரபாண்டியத்தில் ஆபத்தான மரப்பாலம் அகற்றப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

கோட்டூர்,

திருவாரூர் மாவட்டம், கோட்டூர் அருகே விக்கிரபாண்டியம் ஊராட்சியில் ஏரித்தெரு, நடுத்தெரு, பெரிய தெரு ஆகிய பகுதிகளில் 80 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த தெருக்களுக்கு அருகில் அரிச்சந்திரா ஆறு செல்கிறது. இப்பகுதி மக்கள் ரேஷன் கடை, பள்ளிக்கூடம், மருத்துவமனை, பஸ் நிறுத்தம் ஆகியவற்றுக்கு இந்த ஆற்றை கடந்து தான் செல்ல வேண்டும்.

ஆற்றை கடப்பதற்கு மரப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த பாலம் பழுதடைந்து அபாய நிலையில் உள்ளது. இந்த பாலத்தில் உள்ள மூங்கில் கம்புகள் எப்போது வேண்டுமானாலும் உடையும் நிலையில் உள்ளது. இதனால் இந்த பாலத்தில் செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

அகற்ற வேண்டும்

எனவே இந்த ஆபத்தான மரப்பாலத்தை அகற்றி விட்டு நான்கு சக்கர வாகனங்கள் செல்லும் வகையில் கான்கிரீட் பாலம் கட்டி தர வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இந்த பாலம் அமைவதன் மூலம் குலமாணிக்கம், ராமநாதபுரம், பெரியகுருவாடி, காரியமங்கலம் உள்ளிட்ட கிராம மக்கள் திருத்துறைப்பூண்டி, கோட்டூர் ஆகிய பகுதிகளுக்கு எளிதில் செல்லலாம் என அந்த பகுதியினர் தெரிவித்தனர்.

Next Story