நாட்றாம்பாளையத்தில் தொழிலாளர் நல வாரிய முகாமில், 175 புதிய உறுப்பினர்கள் சேர்க்கை


நாட்றாம்பாளையத்தில் தொழிலாளர் நல வாரிய முகாமில், 175 புதிய உறுப்பினர்கள் சேர்க்கை
x
தினத்தந்தி 14 Jun 2019 4:15 AM IST (Updated: 14 Jun 2019 12:40 AM IST)
t-max-icont-min-icon

நாட்றாம்பாளையத்தில் நடந்த முகாமில் தொழிலாளர் நல வாரியத்தில் 175 புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர்.

கிரு‌‌ஷ்ணகிரி, 

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டத்தில் கட்டுமானம், உடலுழைப்பு மற்றும் ஓட்டுனர்கள் உள்பட பல்வேறு அமைப்பு சாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த தொழிலாளர்களை தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களில் உறுப்பினர்களாக பதிவு செய்யும் வகையில், அஞ்செட்டியை அடுத்த நாட்றாம்பாளையம் அரசு பள்ளி வளாகத்தில் சிறப்பு பதிவு முகாம் நடந்தது.

இந்த முகாமில் கிரு‌‌ஷ்ணகிரி தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) முருகேசன் பங்கேற்று, கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழில்களில் ஈடுபடும் தொழிலாளர்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற்றுக்கொண்டார். பின்னர் அதில் 175 தொழிலாளர்களை தொழிலாளர் நல வாரியங்களில் புதிய உறுப்பினர்களாக பதிவு செய்து, அவர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார். மேலும், இந்த முகாமில் ஏற்கனவே பதிவு பெற்ற 9 தொழிலாளர்களுக்கு பதிவினை புதுப்பித்தல் செய்து வழங்கப்பட்டது. இதன் மூலம் மொத்தம் 184 பேர் பயன் பெற்றனர்.

மேற்படி நலவாரியங்களில் பதிவு பெற்ற புதிய உறுப்பினர்களுக்கு அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளான கல்வி உதவித்தொகை, திருமணம் உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, கண்கண்ணாடி உதவித்தொகை, இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை, விபத்து மரணம் உதவித்தொகை மற்றும் 60 வயது முடிவுற்ற தொழிலாளர்களுக்கு மாதம் ரூ. ஆயிரம் ஓய்வூதியம் ஆகியவை பெற்று பயன் பெறும் வகையில் நலத்திட்ட உதவிகள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்த முகாமில் அலுவலக உதவியாளர்கள் நல்லப்பா, லோகநாதன், தொழிற்சங்க பிரதிநிதிகள் முனியப்பன், லட்சுமணன், கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story