ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகம் முற்றுகை


ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகம் முற்றுகை
x
தினத்தந்தி 13 Jun 2019 11:00 PM GMT (Updated: 13 Jun 2019 7:57 PM GMT)

ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை,

இந்திய மாணவர் சங்கத்தினர், நேற்று புதுக்கோட்டை பழைய பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக வந்து, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் ஓவியா, முன்னாள் மாவட்ட செயலாளர் விக்கி உள்பட பலர் கோரிக்கைகள் குறித்து பேசினர்.

அரசு பள்ளிகளை பாதுகாப்பதோடு, அதன் உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். அங்கீகாரமின்றி செயல்படும் தனியார் பள்ளிகளை மூட வேண்டும். 25 சதவீதம் கட்டாய கல்வி உரிமை சட்டத்தை அனைத்து தனியார் பள்ளிகளும் முழுமையாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.

ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண் டும். கல்வி உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும், 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கும் சத்துணவு திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை போராட்டம் நடைபெற்றது. தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியின் நேர்முக உதவியாளர் ஜீவானந்தத்திடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்து விட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலக வளாகத்தில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story