கன்னியாகுமரி அருகே காதலன் கொலை செய்யப்பட்டதால் தீக்குளித்த பெண் சாவு


கன்னியாகுமரி அருகே காதலன் கொலை செய்யப்பட்டதால் தீக்குளித்த பெண் சாவு
x
தினத்தந்தி 14 Jun 2019 4:45 AM IST (Updated: 14 Jun 2019 1:58 AM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரி அருகே காதலன் கொலை செய்யப்பட்டதால் மனமுடைந்த பெண் தீக்குளித்தார். அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

கன்னியாகுமரி,

நெல்லை மாவட்டம் வள்ளியூரை சேர்ந்த புகைப்படக்காரர் ரெசி(வயது 33). இலங்கை அகதியான இவர், வள்ளியூர் அருகே உள்ள சமூகரெங்கபுரம் இலங்கை அகதிகள் முகாமில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். மேலும், கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார்.

ரெசியின் நண்பர் கன்னியாகுமரி அருகே உள்ள பெருமாள்புரத்தை சேர்ந்த புகைப்படக்காரர் கேத்தீஸ்வரன் ஆவார். இவரும் இலங்கை அகதி தான். நண்பர் என்பதால் கேத்தீஸ்வரன் வீட்டுக்கு ரெசி அடிக்கடி வந்து செல்வது வழக்கம். அப்போது, கேத்தீஸ்வரனின் அக்காள் அனுஷாவுக்கும், ரெசிக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.

இந்த விவரம் கேத்தீஸ்வரனுக்கு தெரியவந்ததும், அவர் ரெசியை கண்டித்தார். ஆனால், ரெசி கேட்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த கேத்தீஸ்வரன் ரெசியை கொலை செய்தார். பின்னர், தனது நண்பர்களான சுசீந்திரம் சன்னதி தெருவை சேர்ந்த பழனி(26), பரமார்த்தலிங்கபுரத்தை சேர்ந்த முகமது பைசல்(25) ஆகியோருடன் சேர்ந்து ரெசியின் உடலை நாகர்கோவில் கரியமாணிக்கபுரத்தில் உள்ள சுடுகாட்டில் எரித்துள்ளனர்.

இதுகுறித்து கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து கேத்தீஸ்வரன், பழனி, முகமது பைசல் ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே ரெசி கொலை செய்யப்பட்ட தகவல் அனுஷாவுக்கு தெரியவந்தது. இதனால், மனமுடைந்த அவர் சம்பவத்தன்று காலை வீட்டில் யாரும் இல்லாத போது மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளித்தார். உடனே, அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி அனுஷா பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், இதுகுறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story