புதுவையில் திடீர் மழை மக்கள் மகிழ்ச்சி


புதுவையில் திடீர் மழை மக்கள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 14 Jun 2019 5:00 AM IST (Updated: 14 Jun 2019 2:14 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் நேற்று இரவு திடீரென மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

புதுச்சேரி, 

புதுவையில் கோடை காலம் தொடங்கியது முதல் வெயில் கடுமையாக கொளுத்தி வருகிறது. கடந்த ஒரு வாரமாக 100 டிகிரிக்கும் மேலாக வெயிலின் அளவு பதிவானது. 2 மாதத்துக்கும் மேலாக மழை பெய்யாததால் வெயிலின் தாக்கத்தை இந்த ஆண்டு அதிகம் உணர முடிந்தது.

வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் பகலில் பொதுமக்கள் வெளியில் தலைகாட்ட முடியாத நிலை உள்ளது. இதனால் அலுவலகம் செல்வோரும், பொதுமக்களும் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். புதுவைக்கு வந்து தங்கி இருந்த சுற்றுலா பயணிகள் ஓட்டல்கள், விடுதிகளிலேயே முடங்கினர். மாலை நேரங்களில் கூட அனல் காற்றை உணர முடிகிறது. புதுவையில் நேற்று 104.72 டிகிரி வெயில் பதிவானது.

இந்த நிலையில் நேற்று மாலை வானில் கரு மேகங்கள் உலா வந்தன. குளிர்ந்த காற்று வீசியது. திடீரென்று இரவு 8 மணியளவில் சாரல் மழை பெய்தது. இது 9 மணியளவில் பலத்த மழையாக கொட்டித்தீர்த்தது. சுமார் அரை மணிநேரம் நீடித்த இந்த மழையால் தாழ்வான சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. பகலில் நிலவிய வெயிலின் கொடுமையால் மாலையில் கடற்கரை, பூங்கா போன்ற பொழுதுபோக்கு இடங்களுக்கு சென்றவர்கள் மற்றும் அலுவலகங்களில் பணி முடிந்து வந்தவர்களும் மழையில் நனைந்தபடி வீடு திரும்பினர்.

புதுவையின் புறநகர் பகுதிகளான கிருமாம்பாக்கம், தவளக்குப்பம், பாகூர், அரியாங்குப்பம் உள்பட பல்வேறு பகுதியிலும் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சிறிது நேரம் கழித்து மின் வினியோகம் வழங்கப்பட்டது. பகலில் கடும் வெயிலால் அவதிப்பட்டவர்கள் திடீர் மழையால் மகிழ்ச்சி அடைந்தனர்.

மழையின்போது பிள்ளையார்குப்பத்தில் உள்ள தனியார் மருத்துவமனையின் எதிரே 2 பெண்கள் சாலையை கடக்க முயன்றனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரி அவர்கள் மீது மோதியது. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். ஒரு பெண் பரிதாபமாக இறந்துபோனார். மற்றொருவர் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைபெற்று வருகிறார். இறந்தவர் குறித்த விவரம் உடனே தெரியவில்லை. கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story