கம்பம் நகராட்சி சார்பில், போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றம்


கம்பம் நகராட்சி சார்பில், போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x
தினத்தந்தி 13 Jun 2019 9:45 PM GMT (Updated: 13 Jun 2019 11:31 PM GMT)

கம்பம் நகராட்சி சார்பில் போலீஸ் பாதுகாப்புடன் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

கம்பம், 

கம்பம் நகராட்சியில் முக்கிய வர்த்தக பகுதியாக வேலப்பர் கோவில் தெரு விளங்குகிறது. இது நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளதால் காய்கறி கடைகள், நகைக்கடைகள், பலசரக்கு கடைகள், பல்பொருள் அங்காடிகள், மருத்துவமனைகள், தங்கும்விடுதிகள், துணிக்கடைகள், வங்கிகள் என அனைத்தும் உள்ளன. இதனால் இப்பகுதி காலை முதல் இரவு வரை பரபரப்பாகவே காணப்படும்.

இந்த தெருவில் வணிக நிறுவனத்தினர் மற்றும் சாலையோர வியாபாரிகளின் ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்து வந்தனர். இதையடுத்து வேலப்பர் கோவில் தெருவில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள ஆக்கிரமைப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் நகராட்சியிடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் வேலப்பர் கோவில் தெருவில் சாலையை ஆக்கிரமைத்து கட்டப்பட்ட கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களை அகற்றுவதற்கு நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) செல்வராணி உத்தரவிட்டார். இதையடுத்து கம்பம் வேலப்பர் கோவில் தெருவில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு நகராட்சி சார்பில் தண்டோரா மூலம் எச்சரிக்கை செய்யப்பட்டது. இதையடுத்து வணிகநிறுவனத்தினர் சிலர் தாங்களாகவே முன் வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி கொண்டனர். சிலர் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் இருந்தனர்.

இதைத்தொடர்ந்து நகராட்சி கட்டிட ஆய்வாளர் தங்கராஜ் தலைமையில் போலீஸ் பாதுகாப்புடன் சுகாதார அலுவலர் அரசக்குமார் மற்றும் நகராட்சி ஊழியர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இதேபோல் நகராட்சி நிர்வாகம் மற்ற முக்கிய வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் பாரபட்சமின்றி அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story