அடுத்த ஆண்டு கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் நடைபெறும் : முன்னாள் சபாநாயகர் கோலிவாட் பேட்டி


அடுத்த ஆண்டு கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் நடைபெறும் :  முன்னாள் சபாநாயகர் கோலிவாட் பேட்டி
x
தினத்தந்தி 14 Jun 2019 5:27 AM IST (Updated: 14 Jun 2019 5:27 AM IST)
t-max-icont-min-icon

ஜனதாதளம்(எஸ்) கட்சியுடனான கூட்டணியால் காங்கிரசுக்கு எந்த பலனும் இல்லை என்றும், கர்நாடக சட்ட சபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறும் என்றும் முன்னாள் சபாநாயகர் கோலிவாட் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு, 

பெங்களூருவில் நேற்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் சபாநாயகருமான கோலிவாட் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மாநிலத்தில் ஜனதாதளம்(எஸ்) கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்ததில் எனக்கு விருப்பம் இல்லை. அந்த கட்சியுடன் கூட்டணி அமைத்திருப்பது சரியல்ல. ஜனதாதளம்(எஸ்) கட்சியுடன் கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலை காங்கிரஸ் சந்தித்ததால் பெரும் தோல்வி அடைய நேரிட்டது. கூட்டணியால் காங்கிரசுக்கு எந்த பலனும் இல்லை. இதனால் மாநிலத்தில் கூட்டணி தொடருவது தேவையற்றது. கூட்டணி ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள மந்திரிசபை விரிவாக்கம் நடைபெறுகிறது.

ஆனால் இந்த கூட்டணி அரசு நீண்ட நாட்கள் நீடிக்கப் போவதில்லை. அடுத்த ஆண்டு(2020) மார்ச் மாதத்திற்குள் கர்நாடக சட்டசபைக்கு மீண்டும் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கிறேன். அதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. சட்டசபை ேதர்தலில் மக்கள் அளித்த தீர்ப்புக்கு தலை வணங்கி எதிர்க்கட்சியாக காங்கிரஸ் இருந்திருக்கலாம். அப்படி இருந்திருந்தால், நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கும்.

முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையாவும் மீண்டும் சட்டசபை தேர்தலை சந்திக்கவே விரும்புகிறார். ஆனால் மீண்டும் தேர்தலை சந்திக்க காங்கிரஸ் மேலிடம் விரும்பவில்லை. இந்த விஷயத்தில் பொறுமையாக இருக்கும்படி சித்தராமையாவை காங்கிரஸ் மேலிட தலைவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடந்தால் காங்கிரஸ் வெற்றி பெறுவது உறுதி. அவ்வாறு வெற்றி பெற்றால் முதல்-மந்திரியாக சித்தராமையாவை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தேர்ந்தெடுப்பார்கள். சித்தராமையா தலைமையில் தேர்தலை சந்திப்பது குறித்து காங்கிரஸ் மேலிடம் தான் முடிவு எடுக்கும்.

கூட்டணி ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 2 பேருக்கும் மந்திரி பதவி வழங்குவது தேவையற்றது. அவர்கள் எந்த நேரமும் பா.ஜனதாவுக்கு செல்லலாம். அவர்களுக்கு பதிலாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு மந்திரி பதவி வழங்கலாம். சுயேச்சை எம்.எல்.ஏ. சங்கருக்கு மந்திரி பதவி வழங்க சித்தராமையாவுக்கும் விருப்பம் இல்லை. கட்சி மேலிடம் கூறியதால் அவருக்கு பதவி வழங்கப்படுகிறது. கூட்டணி அரசு கவிழ்ந்து பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் எடியூரப்பா முதல்-மந்திரியாக வாய்ப்பில்லை. இதனை பா.ஜனதாவில் உள்ள என்னுடைய நண்பர்களே தெரிவித்தனர்.

இவ்வாறு கோலிவாட் கூறினார்.

Next Story