தமிழகத்தில் மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் ஆட்சி செய்யும் நிலை உள்ளது கனிமொழி எம்.பி. பேச்சு
தமிழகத்தில் மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் ஆட்சி செய்யும் நிலை உள்ளது என்று கனிமொழி எம்.பி. கூறினார்.
தூத்துக்குடி,
தமிழகத்தில் மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் ஆட்சி செய்யும் நிலை உள்ளது என்று கனிமொழி எம்.பி. கூறினார்.
ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி மாநகர தி.மு.க. சார்பில் மாநகராட்சியில் பலமடங்கு உயர்த்தப்பட்டு உள்ள வீட்டு வரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்டவைகளை குறைக்க, தமிழக அரசு மற்றும் மாநகராட்சியை வலியுறுத்தி தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே நேற்று காலை தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கனிமொழி எம்.பி. தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:–
போராடும் சூழல்
நாடாளுமன்ற தேர்தல் முடிந்து நன்றி சொல்லிக்கூட முடிக்கவில்லை. அதற்குள் ஒரு போராட்டத்தை நடத்தும் சூழலுக்கு இந்த அரசு நம்மை தள்ளி இருக்கிறது. மக்கள் எல்லாவிதத்திலும் இந்த ஆட்சியால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். விவசாயிகள், மாணவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த ஆண்டும் நீட் தேர்வில் வெற்றி பெற முடியாமல் தற்கொலைக்கு தள்ளப்படும் சூழல் உள்ளது.
தமிழகத்தில் எந்த மாணவர்களுக்காக அரசு மருத்துவ கல்லூரிகளை தொடங்கியதோ, அந்த மாணவர்கள் படிக்க முடியாத சூழ்நிலை உருவாக்கப்பட்டு உள்ளது. இந்தி திணிக்கப்படுகிறது. ரெயில்வே அதிகாரிகள் தமிழில் பேசக்கூடாது. ஆங்கிலம் அல்லது இந்தியில் பேச வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. இப்படி சொல்லும் அரசு ஆட்சி பீடத்தில் அமர்ந்து இருக்கிறது. அதையும் நாம் பொறுத்துக் கொண்டு இருக்கிறோம். அவர்களுக்கு காவடி எடுக்கும் ஆட்சியாக அ.தி.மு.க. ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் பாதியை விற்று விட்டார்கள். 8 வழிச்சாலை வேண்டாம் என்று விவசாயிகள் போராடுகின்றனர். ஆனால் அதனை கொண்டு வர முதல்–அமைச்சர் கண்ணும் கருத்துமாக செயல்படுகிறார்.
மக்களின் உணர்வுகள்
தமிழக மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முதல்–அமைச்சர் தயாராக இல்லை. தமிழகத்தில் தண்ணீர் இல்லை. குடிநீரை விலை கொடுத்து வாங்கும் நிலை உள்ளது. சென்னையில் பல அலுவலகங்களை மூடும் நிலை உருவாகி உள்ளது. தீயணைப்புக்கு இருந்த தண்ணீரும் பயன்படுத்தப்பட்டு உள்ளது. பல ஓட்டல்கள், உணவகங்கள் மூடும் நிலை ஏற்பட்டு உள்ளது. அதற்கு எந்த தீர்வையும் அரசு செய்யவில்லை.
தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை சரிவர பராமரிக்கவில்லை. உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. அதிகாரிகள் சொல்வதை கேட்டு, மக்கள் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் தமிழகத்தில் தற்போது ஆட்சி செய்யும் நிலை உள்ளது. அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை. எதிர்க்கட்சியாக இருந்தாலும், தண்ணீர் பிரச்சினையை தீர்க்க நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். ஆட்சி இருந்தும், அமைச்சர் இருந்தும் தூத்துக்குடியில் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க அவர்கள் தயாராக இல்லை.
வரி உயர்வு
மாநகராட்சியில் மண்டலத்தை மாற்றி மக்கள் கட்டமுடியாத அளவுக்கு வரி உயர்த்தப்பட்டு உள்ளது. குடியிருப்பு பகுதிகளில் 50 சதவீதத்துக்கு மிகாமலும், வணிக பகுதியில் 100 சதவீதத்துக்கு மிகாமலும் வரி உயர்த்தலாம் என்பது அரசு உத்தரவு. ஆனால் அதனை மீறி அதிக அளவில் வரி உயர்த்தப்பட்டு உள்ளது.
இந்த போராட்டம் ஒருநாள் அடையாள போராட்டமாக நடந்து முடிந்து விட்டது என்று அதிகாரத்தில், ஆட்சியில் இருப்பவர்கள் யாரும் எண்ணிவிடக் கூடாது. வரியை குறைக்கும் வரை இந்த போராட்டம் தொடரும். தி.மு.க.வினர் எதையும் பாதியில் விட்டு செல்ல மாட்டோம். நாங்கள் நினைத்ததை செய்து முடிப்போம். அதுதான் தலைவர் கலைஞரும், தளபதியும் எங்களுக்கு போட்டு தந்து உள்ள பாதை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்த பிரச்சினை தீர்க்கப்பட்டு, விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும். முதலில் உள்ளாட்சி தேர்தல் வருகிறதா, சட்டமன்ற தேர்தல் வருகிறதா என்பது தெரியாது. ஆகையால் எப்படியும் இந்த பிரச்சினைக்கு நாங்கள் போராடி, இல்லையென்றால் ஆட்சிக்கு வந்து முடிவு காண்போம் என்பதை உறுதியாக கூறுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் ஜெகன், தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் ராஜ்மோகன் செல்வின், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜமன்னார், அவைத்தலைவர் செல்வராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார் ரூபன், மகளிர் அணி அமைப்பாளர் கஸ்தூரிதங்கம், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பேட்டி
தொடர்ந்து கனிமொழி எம்.பி நிருபர்களிடம் கூறும் போது, உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும். அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்காமல் சொத்து வரி உள்ளிட்ட வரிகளை பலமடங்கு உயர்த்தி உள்ளார்கள். நிச்சயமாக இந்த பிரச்சினையில் தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறோம். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையென்றால் தி.மு.க. சார்பில் வழக்கு தொடரப்படும். அதையும் தாண்டி இந்த போராட்டமும் தொடரும்.
முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், எம்.பி.க்கள் சொத்தை விற்று விவசாய கடனை அடைக்க வேண்டும் என்று கூறி உள்ளார். விவசாய கடனை கூட அடைக்க முடியாமல் எதற்கு மத்தியில் பா.ஜனதா ஆட்சிக்கு வரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story