திருச்சியில் உள்ள பொன்மலை ரெயில்வே பணிமனையில் தொழிலாளர்கள் திடீர் வேலைநிறுத்தம்


திருச்சியில் உள்ள பொன்மலை ரெயில்வே பணிமனையில் தொழிலாளர்கள் திடீர் வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 15 Jun 2019 3:30 AM IST (Updated: 14 Jun 2019 11:13 PM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் உள்ள பொன்மலை ரெயில்வே பணிமனையில் தொழிலாளர்கள் திடீர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பொன்மலைப்பட்டி,

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான திருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனையில் டீசல் மற்றும் நீராவி என்ஜின்கள் தயாரிப்பு, பராமரிப்பு, ரெயில் எந்திர உதிரிபாகங்கள் தயாரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இங்கு 4,300 ஆண் தொழிலாளர்கள், 650 பெண் தொழிலா ளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

இந்த ரெயில்வே பணிமனைக்கு உரிய உதிரிபாகங்களை வழங்காமல் ஒரு ரெயிலில் உள்ள உதிரிபாகங்களை கழற்றி மற்றொரு ரெயிலில் பொருத்தி இயக்குவதும், அவற்றில் 70 சதவீத எந்திரங்கள் பழைய நிலையில் ஆயுட்காலம் முடிந்து பின்பும் பயன்படுத்தப்படுகிறது. மேலும் ரூ.38 கோடி மதிப்பிலான சி.என்.சி. எந்திரங்கள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான எந்திரங்கள் உள்ளிட்டவை பல்வேறு துறை பணிமனைகளில் முடங்கி இயக்கமின்றி கிடக்கின்றன.

எனவே, திருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனைக்கு உரிய உபகரணங்கள் வழங்கினால்தான் பணியை தொடர்வோம் என்றும், ரெயில்வேயில் ஆட்குறைப்பு செய்வதை கைவிட வேண்டும் என்றும், நீண்டகாலம் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு உரிய பதவி உயர்வு வழங்கிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பணிமனையில் பணியாற்றும் ரெயில்வே தொழிலாளர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் திடீரென வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த வேலைநிறுத்த போராட்டத்துக்கு தென்னக ரெயில்வே மஸ்தூர் யூனியன்(எஸ்.ஆர்.எம்.யூ.) துணைப்பொது செயலாளர் வீரசேகரன் தலைமை தாங்கினார். வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் பணிமனை முன்பு திரண்டு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கோஷம் எழுப்பினார்கள். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ரெயில்வே பணிமனை தொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக பணிமனையில் தொழிலாளர்கள் இன்றி வெறிச்சோடியது. அனைத்து எந்திரங்களும் இயங்கவில்லை. வேலை நிறுத்த போராட்டத்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தங்கள் கோரிக்கைகளை தீர்க்க அதிகாரிகள் உறுதி அளித்தால், தங்களது வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட்டு பணியில் ஈடுபடுவோம் என்று எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்க துணைப்பொது செயலாளர் வீரசேகரன் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து ரெயில்வே பணிமனை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்பட்டதால் வேலை நிறுத்த போராட்டம் கைவிடப்பட்டது. நேற்று மாலை முதல் வழக்கம்போல பணிமனையில் தொழிலாளர்கள் பணியை தொடர்ந்தனர்.

Next Story